தேசிய செய்திகள்
கேரளாவில் ஹிஜாப் அணிந்து பளு தூக்குதல் போட்டிகளில் பங்கு பெறும் பல் மருத்துவ மாணவி

கேரளாவை சேர்ந்த பல் மருத்துவ மாணவி ஒருவர் மகளிர் பிரிவுக்கான பளு தூக்குதல் போட்டிக்காக ஹிஜாப் அணிந்து பயிற்சி பெற்று வருகிறார்.
வடக்கரா,

கேரளாவின் வடக்கரா பகுதியை சேர்ந்தவர் மஜிஜியா பானு (வயது 23).  முஸ்லிம் மதத்தினை சேர்ந்த பல் மருத்துவ மாணவியான இவர், பளு தூக்குதல் போட்டிகளிலும் கலந்து கொள்கிறார்.  இதற்காக அவர் ஹிஜாப் (முகம் மறைக்கும் துணி) அணிந்து கொண்டு வந்து பயிற்சி மேற்கொள்கிறார்.

கேரள மாநில பளு தூக்குதல் கூட்டமைப்பினால் மாநிலத்திலேயே வலிமையான பெண் என 3 முறை தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.  இதேபோன்று, பல் மருத்துவ பயிற்சியை தொடர்ந்து கொண்டே பளு தூக்குதல் மற்றும் கை மல்யுத்தம் ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டு தேசிய அளவில் பதக்கங்களை வென்றுள்ளார்.

அவர் பயிற்சி மேற்கொள்ளும்பொழுதும் அல்லது போட்டிகளில் கலந்து கொள்ளும்பொழுதும் ஹிஜாப் அணிந்து செல்கிறார்.

இதுபற்றி அவர் கூறும்பொழுது, தொடக்க நாட்களில் நான் ஹிஜாப் அணிந்து பயிற்சி மேற்கொள்ளும்பொழுது ஆண்கள் வித்தியாசமுடன் கவனித்தனர்.  ஆனால் அவர்களை போன்று நானும் தீவிரமுடன் பயிற்சி மேற்கொள்கிறேன் என பின்னர் உணர்ந்தனர்.  அதன்பின் ஆண்கள் வழக்கம்போல் தங்களது வேலையில் கவனம் செலுத்தினர் என கூறுகிறார்.

ஹிஜாப் ஒருபொழுதும் ஒரு பெண்ணுக்கு தடையாக இருப்பதில்லை.  ஒரு பெண் தனது உடலை காட்ட சுதந்திரம் இருக்கிறதெனில், அதனை மூடி மறைப்பதற்கும் அவருக்கு சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும் என்று கூறும் அவர், ஹிஜாப் அணிவதில் பெருமை அடைகிறேன்.  அது எனது அடையாளத்தின் ஒரு பகுதி.  அது எந்த வகையிலும் என்னை தடுக்கவில்லை.  ஆனால் அதனால் கண்ணியமும் மற்றும் வலிமையும் பெறுகிறேன் என்று கூறுகிறார்.

அவரது கிராமத்தில் பயிற்சி மேற்கொள்ள வசதி எதுவும் இல்லாத நிலையில் கல்லூரி வகுப்புகளை முடித்து விட்டு 60 கி.மீட்டர் ரெயிலில் பயணம் செய்து பயிற்சி மேற்கொண்டு உள்ளார்.  பின் இரவு 9 மணிக்கு வீடு திரும்பியுள்ளார். தொடக்கத்தில் சற்று சங்கடம் ஏற்பட்டாலும் மெல்ல நம்பிக்கை பெற்று அது வழக்கம் ஆகி விட்டது என அவர் கூறுகிறார்.

அடுத்த மாதம் துருக்கியில் நடைபெற உள்ள உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் 2018 போட்டியில் கலந்து கொள்ள சுறுசுறுப்புடன் அவர் தயாராகி வருகிறார்.