தேசிய செய்திகள்
அனைத்து முக்கிய பிரச்சினைகளுக்கும் பிரதமர் மோடி மவுனம் காக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்

அனைத்து முக்கிய பிரச்சினைகளுக்கும் பிரதமர் மோடி மவுனம் காக்கிறார் என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
புதுடெல்லி,

வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்தும் நாடு முழுவதும் இன்று (திங்கட்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதேபோல் இடதுசாரிகள் கட்சிகள் சார்பிலும் முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த முழு அடைப்பு போராட்டம் காரணமாக நாடு முழுவதும் பல இடங்களில் சாலை மற்றும் ரயில் நிலையங்கள் மறியல் நடத்தப்பட்டு வருகிறது. 

டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் போராட்டத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சஞ்செய் சிங் உள்பட இடதுசாரி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். 

இந்த கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,  ” பிரதமர் மோடி அனைத்து பிரச்சினைகளிலும் மவுனம் காக்கிறார். பெட்ரோல் விலை உயர்வு, விவசாயிகள் நிலை, பெண்களுக்கு எதிரான கொடுமைகள் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் பற்றி பிரதமர் மோடி மவுனம் காக்கிறார். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மோடி நிறைவேற்றவில்லை. நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து பாரதீய ஜனதா ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரவேண்டும். கடந்த 70 ஆண்டுகளில் செய்யாததை நான் செய்யப்போகிறேன் என மோடி பேசினார். அதுபோலவே, மோடி தற்போது செய்து விட்டார். கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது. பெட்ரோல் விலை 80 ரூபாயை தாண்டியுள்ளது” என்றார்.

இந்த போராட்டத்தின் போது பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், “ நாட்டு நலனுக்கு தேவையில்லாத பல விஷயங்களை மோடி அரசு செய்துள்ளது.  வேறுபாடுகளை களைந்துவிட்டு நாட்டு நலனுக்காகவும் ஜனநாயகத்தை காக்கவும் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து வர வேண்டும்” என்றார்.