உத்தரபிரதேசத்தில் கொட்டி தீர்க்கும் கனமழை

தொடர்ந்து 2-வது நாளாக உத்தரபிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும், மத்தியபிரதேச மாநிலத்திலும் கனமழை பெய்து வருகிறது. #UPRain

Update: 2018-09-10 07:17 GMT
லக்னோ,

உத்தரபிரதேசத்தில் கடந்த சில வாரங்களாக பெய்த கனமழை காரணமாக மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. நீர் நிலைகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் சுமார் 100 வீடுகள் பலத்த சேதம் அடைந்தன. கனமழையால் 30-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக மழை குறைந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பிய நிலையில், நேற்று திரும்பவும் மழை பெய்யத் தொடங்கியது.

தொடர்ந்து 2-வது நாளாக உத்தரபிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும், மத்தியபிரதேச மாநிலத்திலும் கனமழை பெய்து வருகிறது. அலகாபாத் பகுதியில் பெய்யும் பேய்மழை காரணமாக கங்கை மற்றும் யமுனா ஆற்றுப்பகுதிகளின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கங்கை ஆற்றுப்பகுதியில் 63 செ.மீ. மழையும், யமுனா ஆற்றுப்பகுதியில் 45 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. கங்கை மற்றும் யமுனா ஆற்றுப்பகுதிகளின் நீரின் அளவு உயர்ந்து வரும் நிலையில், நீர்மட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இந்த நிலை அடுத்த 24 மணி முதல் 48 மணி நேரம் வரை தொடரும். தொடர் மழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆற்றின் நீர்மட்டம் நான்காவது முறையாக உயர்ந்துள்ளது என நீர்ப்பாசனத்துறை நிர்வாக பொறியாளர் மனோஜ் குமார் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்