ஸ்டெர்லைட் வழக்கு; தேசிய பசுமை தீர்ப்பாய விசாரணைக்கு தடை விதிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்டு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாய விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

Update: 2018-09-10 07:28 GMT
புதுடெல்லி,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் பசுமை தீர்ப்பாய விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டு தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிராக வேதாந்தா குழுமம் டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயம் சென்றது. அப்போது, ஸ்டெர்லைட் ஆலைக்குள் அதன் நிர்வாகப் பிரிவு அலுவலகம் செயல்படலாம் என்று அனுமதியளிக்கப்பட்டது. ஆனால் எந்த விதமான உற்பத்தி பணிகளும் கண்டிப்பாக நடைபெற கூடாது என உத்தரவிட்டது.

ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்க கோரி வேதாந்தா குழுமம் தாக்கல் செய்த மனு குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவித்தது.

இந்த குழுவில் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் பிரதிநிதிகள் இடம்பெறுவார்கள். இந்த குழு 2 வாரங்களில் பொறுப்பேற்று கொண்டு, 6 வாரங்களில் ஆய்வுகளை முடித்து அறிக்கையை சமர்ப்பிக்கும்.

இதற்கிடையே ஸ்டெர்லைட் ஆலை நிர்வாக பணிகளை மேற்கொள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியதை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

இதில், வேதாந்தா நிறுவனத்தின் மேல் முறையீட்டு மனு விசாரணைக்கு தடை கோரியிருந்த தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.  எந்த அடிப்படையில் தடை கோருகிறீர்கள் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

ஸ்டெர்லைட்டில் குழு ஆய்வு நடத்த தடை விதிக்க முடியாது என்றும் ஆலை பராமரிப்பு பற்றி தேசிய தீர்ப்பாயம் விசாரணை மேற்கொள்ளும் என்றும் நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழுவின் ஆய்வு பணிகள் நடத்தவும் தடை விதிக்கப்படவில்லை.  குழுவின் ஆய்வு அறிக்கை அடிப்படையிலேயே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆலையை மூடுவது பற்றி குழு அளிக்கும் பரிந்துரையின் பேரிலேயே ஆலை மூடப்படும் என்றும் தகவல் தெரிவிக்கின்றது.

மேலும் செய்திகள்