வதந்தி மற்றும் குழப்பம் விளைவிக்கும் முயற்சி பாரத் பந்த்; பாரதீய ஜனதா

காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகள் நடத்தும் பாரத் பந்த் போராட்டம் ஆனது பொதுமக்களிடையே வதந்தி மற்றும் குழப்பம் விளைவிக்கும் முயற்சி என பாரதீய ஜனதா கூறியுள்ளது.

Update: 2018-09-10 07:52 GMT
புதுடெல்லி,

பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.  இதனால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்தும் நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது. இதேபோல் இடதுசாரிகள் கட்சிகள் சார்பிலும் முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடப்பட்டிருந்தது.  இந்த முழு அடைப்பு போராட்டம் காரணமாக நாடு முழுவதும் பல இடங்களில் சாலை மற்றும் ரயில் நிலையங்களில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

தலைநகர் டெல்லியில்  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக  கண்டனப்பேரணி நடைபெற்றது. 

இந்த போராட்டத்தில் பங்கேற்பதற்கு முன், டெல்லியில் ராஜ்காட்டில்  உள்ள காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினர்.  பின்னர் ராஜ்காட்டில் இருந்து ராம்லீலா மைதானம் வரை ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் பேரணியாக சென்று தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். 

இந்நிலையில் மத்திய மந்திரி மற்றும் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரான முக்தார் அப்பாஸ் நக்வி இதுபற்றி கூறும்பொழுது, காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத்தில் இருந்தபொழுது விலைவாசி உயர்வு விவகாரத்தில் குற்ற பதிவு கொண்டிருந்தது.  ஆனால் அக்கட்சி தற்பொழுது முதலை கண்ணீர் வடித்து வருகிறது.

காங்கிரஸ் கட்சி ஊழல் நிறைந்த கப்பல்.  அதனுடன் கூட்டு சேரும் எந்த கட்சியும் மூழ்கி விடும்.  அதனாலேயே அக்கட்சி விடுத்த பாரத் பந்தில் கலந்து கொள்ளாமல் பல கட்சிகள் புறக்கணித்துள்ளன.

கடந்த 2014ம் ஆண்டு மே மாதத்தில் பிரதமர் மோடி பதவியேற்றபொழுது பணவீக்கம் 11 சதவீதம் என்ற அளவில் இருந்தது.  அதனை தனது கொள்கைகள் மற்றும் நேர்மையான பணியால் 4 சதவீதம் என்ற அளவிற்கு அவர் கொண்டு வந்துள்ளார் என கூறினார்.  இந்த சதவீதம் இன்னும் குறையும் என்ற தனது நம்பிக்கையையும் நக்வி வெளிப்படுத்தி உள்ளார்.

வன்முறை மற்றும் அராஜகம் ஆகியவற்றால் பொதுமக்களிடையே வதந்தி மற்றும் குழப்பம் விளைவிக்க காங்கிரஸ் கட்சி முயற்சிக்கிறது என அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்