முழு அடைப்பு போராட்டத்தில் மோதல் கல்வீச்சில் பா.ஜனதா தலைவர் தலையில் காயம்

முழு அடைப்பு போராட்டத்தின் போது காங்கிரஸ் மற்றும் பா.ஜனதாவினர் இடையே மோதல் வெடித்ததை அடுத்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. #BharathBandh #BJP #Congress

Update: 2018-09-10 09:55 GMT


வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளின் முழு அடைப்பு போராட்டம் இன்று நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஒன்றான கர்நாடகாவில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. உடுப்பியில் போராடத்தின் போது மோதல் வெடித்தது காரணமாக காங்கிரஸ் - பா.ஜனதா தலைவர்கள் காயம் அடைந்துள்ளார்கள். மோதல் வெடித்ததை அடுத்து உடுப்பி மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவை அமல்படுத்தியுள்ளது. நாளை காலை 6 மணி வரையில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மோதலின் போது கற்கள் வீசப்பட்டதில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட அளவிலான தலைவர் பிரபாகர் பூஜாரி காயம் அடைந்துள்ளார். அவருடைய தலையில் காயம் ஏற்பட்டதை அடுத்து மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனையடுத்து காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா தொண்டர்கள் இடையே மோதல் வெடித்தது. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். போலீஸ் நடத்திய தடியடியின் போது காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரமேஷ் கஞ்சானும் காயம் அடைந்துள்ளார். அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் தீவிரமாக இருக்கும் நிலையில் கர்நாடகாவிற்கு செல்லும் தமிழக பஸ்கள் ஓசூரில் நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்