தேசிய செய்திகள்
பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கு; நிரவ் மோடியின் சகோதரிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டிஸ் தாக்கல்

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் வைர வியாபாரி நிரவ் மோடியின் சகோதரிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டிஸ் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,

மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலம் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, வெளிநாட்டுக்கு தப்பி சென்றுள்ளார். அவருக்கு எதிராக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிரவ் மோடிக்கு எதிராக நிதி மோசடி தடுப்பு சட்டம் மற்றும் பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

இந்த வழக்கில் நிரவ் மோடியின் உறவினரான மெகுல் சோக்சி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.  இவர்கள் இருவரும் ஜனவரி முதல் வாரத்தில் வெளிநாட்டுக்கு தப்பியோடி விட்டனர்.

இந்த நிலையில், நிரவ் மோடியின் சகோதரி பூர்வி தீபக் மோடிக்கு (வயது 44) எதிராக ரெட் கார்னர் நோட்டிஸ் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.  பெல்ஜிய நாட்டு குடியுரிமை பெற்றுள்ள பூர்வி மோடி பணமோசடி வழக்கில் தேடப்படும் நபராக உள்ளார்.  இவரை சர்வதேச அளவில் கைது செய்வதற்கு அதிகாரம் அளிக்கும் வகையில் இந்த நோட்டிஸ் செயல்படும்.

இந்த வழக்கின் விசாரணையை மேற்கொண்டு முன்னெடுத்து செல்வதற்காக அமலாக்க துறை கேட்டு கொண்டதன்பேரில் இன்டர்போல் இந்த நோட்டிஸ் உத்தரவை பிறப்பித்துள்ளது.

கடந்த மார்ச்சில் பூர்வி மோடியின் பெயரை அமலாக்க துறை முதல் குற்ற பத்திரிகை அறிக்கையில் இடம் பெற செய்தது.

இதேபோன்ற இன்டர்போல் நோட்டிஸ் நிரவ் மோடியின் அமெரிக்க வர்த்தக நிறுவன உயரதிகாரி மிஹிர் ஆர். பன்சாலிக்கு எதிராக சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அமலாக்க துறை மற்றும் சி.பி.ஐ.யால் விசாரிக்கப்பட்டு வரும் இந்த வழக்கின் ஒரு பகுதியாக நிரவ் மோடிக்கு எதிராகவும் கடந்த காலத்தில் இந்த நோட்டிஸ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.