தேசிய செய்திகள்
மகாராஷ்டிராவில் பாரத் பந்த்: ரெயில் போக்குவரத்து பாதிப்பு, 14 பேருந்துகள் சேதம்; 100 பேர் கைது

மகாராஷ்டிராவில் நடந்த பாரத் பந்தில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 14 பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டன.
மும்பை,

பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.  இதனால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்தும் நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது. இதேபோல் இடதுசாரிகள் கட்சிகள் சார்பிலும் முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடப்பட்டது.

இதற்கு மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ், ராஜ் தாக்கரே தலைமையிலான நவநிர்மாண் சேனா, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டன.

இந்த நிலையில், மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளிலும் எதிர் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.  இதில் 14 பேருந்துகள் சேதமடைந்து உள்ளன.  இவற்றில் மத்திய மும்பை மற்றும் செம்பூர் புறநகர் பகுதியில் அதிக அளவிலான பேருந்துகள் போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டன.

ஆட்டோ மற்றும் வாடகை கார்கள் குறிப்பிட்ட அளவில் இயங்கின.  ரெயில்களில் குறைவான கூட்டம் இருந்தது.  நாசிக் நகரில் வணிக சந்தைகள் மற்றும் கடைகள் மூடப்பட்டன.

இதேபோன்று புறநகர் ரெயில்கள் மற்றும் மெட்ரோ ரெயில் சேவையும் மும்பையில் பல்வேறு இடங்களில் தடுத்து நிறுத்தப்பட்டன.

நவநிர்மாண் சேனாவை சேர்ந்த சில தொண்டர்கள் அரசுக்கு எதிரான பேனர்களுடன் டி.என். நகர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் குதித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனால் அங்கு ரெயில் சேவை பாதிப்படைந்தது.

எரிபொருள் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், தேர்தலுக்கு முந்தைய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என மோடி அரசை குறை கூறியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

நவநிர்மாண் சேனாவை சேர்ந்த உறுப்பினர்கள் முதல் மந்திரி பட்னாவிசின் பாதுகாப்பு வாகனத்தினை சித்தி விநாயகர் கோவில் அருகே தடுத்து நிறுத்த முயன்றனர்.  ஆனால் அவர்கள் பின்னர் கைது செய்யப்பட்டனர்.

இதேபோன்று அக்கட்சியினர் திண்டோஷி பகுதியில் பா.ஜ.க.வை சேர்ந்த வினோத் மிஷ்ராவின் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தினர்.  பேருந்துகளின் டயர்களை சேதப்படுத்தினர்.

கோத்ரட் மற்றும் கோரிகாவன் பூங்கா உள்ளிட்ட சில பகுதிகளில் கடைகள் வலுகட்டாயப்படுத்தி மூடப்பட்டன.  சில பெட்ரோல் பம்புகளும் மூடப்பட்டன.

மும்பையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் என 100 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.