தேசிய செய்திகள்
பா.ஜனதா அரசு அனைத்து எல்லைகளையும் தாண்டிவிட்டது மன்மோகன் சிங் காட்டம்

பா.ஜனதா அரசு அனைத்து எல்லைகளையும் தாண்டிவிட்டது என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காட்டமாக தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,


பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடந்தது. டெல்லி ராம் லீலா மைதானத்தில் நடந்த கண்டன கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமை தாங்கினார். சோனியா காந்தி, மன்மோகன் சிங் உள்பட காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் கலந்துக்கொண்டார்கள். ராகுல் காந்தி பேசுகையில் பா.ஜனதா அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். முன்னதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசும்போது, பொதுமக்கள் இந்த அரசின் மீது மிகுந்த கோபத்தில் உள்ளனர் என்றார். 

விவசாயிகள், சிறு வணிகர்கள் மிகுந்த துயரத்தில் இருக்கின்றனர். வேலைவாய்ப்புகள் இல்லாமல் இளைஞர்கள் கவலையோடு உள்ளார்கள்.  அரசியல் கட்சிகள் தங்களுக்குள் உள்ள சிறுசிறு கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு பா.ஜனதா அரசுக்கு எதிராக போராட ஒருங்கிணையவேண்டும். நாட்டுக்கு நிறைய செய்து இருக்கிறோம் என்று மோடி அரசு கூறுகிறது. ஆனால் அது நாட்டின் நலன்களுக்கானது அல்ல. இந்த அரசு அனைத்து எல்லைகளையும் மீறி விட்டது. நமது ஜனநாயகத்தை பாதுகாக்க நாம் அனைவரும் தயாராவோம். இந்த அரசாங்கத்தை மாற்றுவதற்குரிய சரியான நேரம் விரைவில் வரும் என்று கூறினார் மன்மோகன் சிங்.