தேசிய செய்திகள்
சிறப்பு அந்தஸ்து விவகாரம்: காஷ்மீர் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கிறோம் - மெகபூபா அறிவிப்பு

மக்கள் ஜனநாயக கட்சி காஷ்மீர் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கிறது என மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.


ஸ்ரீநகர்,  

ஜனாதிபதி ஆட்சியின் கீழ் இருக்கும் காஷ்மீரில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. மாநிலத்துக்கு வழங்கியுள்ள சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டு அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைத்துள்ளது. ஜம்மு-காஷ்மீரில் உள்ளாட்சிப் பிரிவுகளுக்கான தேர்தல் நடைபெற இருப்பதைக் கருத்தில் கொண்டு, சட்டப்பிரிவு 35ஏ-வுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று ஜம்மு-காஷ்மீர் அரசு கேட்டுக்கொண்டதை அடுத்து ஒத்திவைக்கப்பட்டது.

குடியரசுத் தலைவர் உத்தரவின் பேரில் கடந்த 1954-ஆம் ஆண்டு அரசமைப்பில் சேர்க்கப்பட்ட சட்டப்பிரிவு 35-ஏ ஆனது, ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு அந்தஸ்தையும், சில உரிமைகளையும் வழங்குகிறது. 

அந்தச் சட்டப் பிரிவின்படி, பிற மாநிலங்களை சேர்ந்தவர்களை திருமணம் செய்யும் ஜம்மு-காஷ்மீர் பெண்களுக்கு சொத்துரிமை மறுக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு விவகாரம் காஷ்மீரில் மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 35ஏ தொடர்பாக மத்திய அரசும், கவர்னர் ஆட்சி நிர்வாகமும் தங்கள் நிலையை தெளிவுபடுத்தும் வரை இந்த உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக உமர் அப்துல்லாவின் தேசிய மாநாடு கட்சி கூறியிருந்தது.

இந்நிலையில் மக்கள் ஜனநாயக கட்சி காஷ்மீர் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கிறது என மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார். அக்கட்சியின் ஆலோசனை கூட்டத்தில், இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த கூட்டத்துக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய மெகபூபா முப்தி, மாநிலத்தில் தற்போது நிலவும் சூழல், உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு உகந்ததாக இல்லை என தெரிவித்தார். மேலும் இந்த தேர்தலுக்காக வழக்கை ஒத்தி வைத்திருப்பது, சிறப்பு அந்தஸ்து மீதான தாக்குதலாக இருக்கலாம் என மக்களுக்கு மிகுந்த அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.