பெட்ரோல், டீசல் விலை உயர்வு: முழு அடைப்பால் மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை முடக்கம் - பீகார், மத்திய பிரதேசத்தில் வன்முறை சம்பவங்களால் பரபரப்பு

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நேற்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்தின. இதனால் சில மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

Update: 2018-09-10 21:15 GMT
புதுடெல்லி,

ஜெட் வேகத்தில் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது அத்தியாவசிய பொருட்களின் விலையிலும் எதிரொலிப்பதால் ஏழை, நடுத்தர மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி உள்ளனர்.

இந்த விலை உயர்வை கட்டுப்படுத்துமாறு பொதுமக்களும், எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து அரசை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் எந்த மாற்றமும் நிகழாததால் 10-ந் தேதி (நேற்று) நாடு தழுவிய முழு அடைப்பு (பாரத் பந்த்) நடத்த பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் அழைப்பு விடுத்தது. இதற்கு 21 எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

அதன்படி காங்கிரஸ் தலைமையில் நேற்று நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. பெரும்பாலும் அமைதியாக நடந்து முடிந்த இந்த போராட்டத்துக்கு பரவலான ஆதரவு காணப்பட்டது. எனினும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் முழுமையான ஆதரவு இருந்தது.

இதனால் அந்த மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. இந்த மாநிலங்களில் போராட்டம் மற்றும் மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தொண்டர்கள் நூற்றுக்கணக்கில் கைது செய்யப்பட்டனர்.

தலைநகர் டெல்லியில் கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள் அனைத்தும் வழக்கம் போல செயல்பட்டன. ராம்லீலா மைதானத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் டார்யாகஞ்ச் பகுதியில் போக்குவரத்து முடங்கியது. மும்பையில், மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான அசோக் சவான், அந்தேரிக்கு மின்சார ரெயிலில் சென்று, பின்னர் அங்கேயே ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.

ஒடிசாவின் பல பகுதிகளில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ரெயில் மற்றும் சாலை மறியலில் இறங்கின. இதனால் சாலை மற்றும் ரெயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. 10-க்கும் மேற்பட்ட ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. பள்ளி, கல்லூரிகள், கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. கல்விக்கூடங்களில் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன. சூரியபகவான் கோவிலின் டிக்கெட் கவுண்ட்டரை போராட்டக்காரர்கள் பூட்டினர்.

கேரளாவில் முழு அடைப்பு தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் அரசு மற்றும் தனியார் வாகனங்கள் இயங்காததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. தெலுங்கானாவில் முழு அடைப்புக்கு பரவலான ஆதரவு காணப்பட்டது. பல இடங்களில் காங்கிரஸ், தெலுங்குதேசம் மற்றும் கம்யூனிஸ்டு தொண்டர்கள் மறியலில் ஈடுபட்டனர். உஸ்மானியா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.

கர்நாடகாவில் அரசு பஸ்கள், தனியார் வாகனங்கள் எதுவும் ஓடவில்லை. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. மங்களூருவில் திறந்திருந்த ஓட்டல்கள் மற்றும் கடைகள் மீது கற்கள் வீசப்பட்டன. மேற்கு வங்காளத்தில் முழு அடைப்புக்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை. அங்கு பெரும்பாலான பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் திறந்தே இருந்தன.

பீகாரில் பல இடங்களில் தீ வைப்பு, கடைகள் சூறையாடல் போன்ற வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. தனியார் பள்ளிகளும், வணிக நிறுவனங்களும் மூடப்பட்டன. எனினும் அரசு நிறுவனங்கள் வழக்கம் போல இயங்கின.

அங்குள்ள ஜெகனாபாத் மாவட்டத்தில் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கால் அவதிப்பட்ட 2 வயது பெண் குழந்தை ஒன்றை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆட்டோ கிடைக்க தாமதமானதால், குழந்தை இறந்து விட்டதாக அதன் பெற்றோரும், பா.ஜனதாவினரும் குற்றம் சாட்டினர் ஆனால் ஆட்டோக்கள் இயங்குவதை போராட்டக்காரர்கள் தடுக்கவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

இதைப்போல அருணாசல பிரதேசத்திலும் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. அங்கும் தனியார் வாகனங்கள் எதுவும் இயங்கவில்லை.

எனினும் உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் முழு அடைப்புக்கு ஓரளவே ஆதரவு காணப்பட்டது. மத்திய பிரதேசத்திலும் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. மிசோரமில் காங்கிரஸ் ஆட்சி நடந்தாலும் முழு அடைப்பால் அங்கு எவ்வித தாக்கமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்