ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: கார்த்தி சிதம்பரத்துக்கு தனிக்கோர்ட்டு நோட்டீஸ் - 18-ந் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவு

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரும் அமலாக்கப்பிரிவு மனுவின் மீது வருகிற 18-ந் தேதிக்குள் பதில் அளிக்குமாறு கோரி கார்த்தி சிதம்பரத்துக்கு நோட்டீஸ் அனுப்ப சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2018-09-10 21:45 GMT
புதுடெல்லி,

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் ஏர்செல் நிறுவனத்தில், மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனம் முதலீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டதில் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

இந்த விவகாரத்தில், அப்போது நிதி மந்திரியாக இருந்த ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் நடத்தும் கன்சல்டன்சி நிறுவனம் ஆதாயம் பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

இந்த வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது கடந்த ஜூலை 13-ந் தேதி அமலாக்கப்பிரிவும், ஜூலை 19-ந் தேதி சி.பி.ஐ.யும் டெல்லியில் உள்ள தனிக்கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தன.

இந்தநிலையில், இந்த வழக்கில் ப.சிதம்பரத்தையும், கார்த்தி சிதம்பரத்தையும் வருகிற அக்டோபர் 8-ந் தேதி வரை கைது செய்ய தடை விதித்து கடந்த மாதம் 7-ந் தேதி தனிக்கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

இதனை தொடர்ந்து, ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு தொடர்பான வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டி இருப்பதால், அவரை அக்டோபர் 8-ந் தேதி வரை கைது செய்ய தடை விதித்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி அமலாக்கப்பிரிவின் சார்பில் தனிக்கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு தனிக்கோர்ட்டில் நீதிபதி ஓ.பி.சைனி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கப்பிரிவின் சார்பில், கார்த்தி சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றும், எனவே அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து நீதிபதி, இந்த வழக்கில் வருகிற 18-ந் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு கோரி கார்த்தி சிதம்பரத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். அத்துடன் வழக்கு விசாரணையை 18-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

மேலும் செய்திகள்