தேசிய செய்திகள்
முழு அடைப்பு போராட்டம்: புதுச்சேரி மாநிலத்தில் பஸ், ஆட்டோக்கள் ஓடவில்லை - பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

முழுஅடைப்பு போராட்டத்தையொட்டி புதுச்சேரி மாநிலத்தில் நேற்று பஸ், ஆட்டோக்கள் ஓடவில்லை. கடைகள், தனியார் பள்ளிகள் மூடப்பட்டன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
புதுச்சேரி,

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று முழுஅடைப்பு போராட்டம் நடந்தது. காங்கிரஸ் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட முழு அடைப்பு போராட்டத்துக்கு தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன.

முழு அடைப்பின் காரணமாக புதுவையில் கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. நேரு வீதி, காந்தி சாலை, அண்ணாசாலை, மிஷன் வீதி, 100 அடி ரோடு, காமராஜர் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. சினிமா தியேட்டர்களில் பகல் காட்சிகள் ரத்துசெய்யப்பட்டன.

அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படாததால் புதுவை பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. ஆட்டோக்கள், டெம்போக்களும் இயக்கப்படவில்லை. ஒரு சில ஆட்டோக்கள் ஓடின.

நேற்று காலை காரைக்காலில் இருந்து புதுச்சேரிக்கு சென்ற தமிழக அரசு பஸ் நெல்லித்தோப்பு சிக்னல் அருகே வந்தபோது ஒரு கும்பல் கல்வீசி தாக்கியதில், அந்த பஸ்சின் பின்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அலறியடித்துக்கொண்டு இறங்கி ஓட்டம்பிடித்தனர்.

தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. அரசு பள்ளிகள் வழக்கம்போல் இயங்கின. புதுச்சேரியில் முழு அடைப்பின்போது சாலை மறியல், கொடும்பாவி எரிப்பு, மறியல் என ஆங்காங்கே பல இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக மொத்தம் 300-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

காரைக்காலில் அனைத்து பகுதிகளிலும் கடைகள் மூடப்பட்டிருந்தன. ஆட்டோ, வேன், லாரிகள், தனியார் பஸ்கள் இயங்கவில்லை. ஒரு சில தமிழக அரசு பஸ்கள் மட்டும் ஓடின. அதையும் நிறுத்துமாறு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியதால் நிறுத்தப்பட்டது.

முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 11 மீனவ கிராமங்களைச்சேர்ந்த மீனவர்கள் நேற்று மீன் பிடிக்க செல்லவில்லை. பஸ்கள் ஓடாததாலும், கடைகள் திறக்கப்படாததாலும் புதுச்சேரி மாநிலத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.