தேசிய செய்திகள்
மேகதாதுவில் புதிய அணை: இருமாநில முதல்-மந்திரிகள் கூட்டத்தை கூட்ட வேண்டும் - பிரதமர் மோடியிடம் கர்நாடக உயர்மட்ட குழு வலியுறுத்தல்

மேகதாதுவில் புதிய அணை கட்டுவது தொடர்பாக கர்நாடகம், தமிழ்நாடு முதல்-மந்திரிகள் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் கர்நாடக உயர்மட்ட குழுவினர் வலியுறுத்தினர்.
புதுடெல்லி,

கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் ரூ.5,912 கோடி செலவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு தமிழ்நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில் பிரதமர் மோடியை கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி தலைமையிலான உயர்மட்ட குழுவினர் நேற்று டெல்லியில் நேரில் சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்பின்போது, குடகு உள்பட சில மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு நிவாரண உதவி வழங்க கோரி பிரதமரிடம் மனு கொடுத்தனர்.மேலும், மேகதாதுவில் புதிய அணை கட்ட அனுமதி வழங்க வேண்டும் என்று குழுவினர் கோரிக்கை விடுத்தனர்.

இந்த சந்திப்புக்கு பின் நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதனால் கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநில முதல்-மந்திரிகளின் கூட்டத்தை கூட்டுமாறு பிரதமரிடம் வலியுறுத்தி இருக்கிறோம்.

புதிய அணை கட்டுவதால் தமிழகத்திற்கு நடுவர் மன்ற உத்தரவுப்படி வழங்க வேண்டிய நீருக்கு எந்த பாதிப்பும் இல்லை. காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு கடந்த ஆகஸ்டு மாதம் 31-ந் தேதி வரை 314.40 டி.எம்.சி.(ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.