ராஜீவ் கொலை கைதிகளை விடுவிக்க அகில இந்திய காங்கிரஸ் எதிர்ப்பு

ராஜீவ் காந்தி கொலை கைதிகளை விடுவிக்க அகில இந்திய காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Update: 2018-09-11 00:00 GMT
புதுடெல்லி,

ராஜீவ் காந்தி கொலை கைதிகளை விடுவிக்க அகில இந்திய காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அவர்களை தண்டிக்கும் கடமையில் இருந்து மாநில அரசு நழுவக்கூடாது என்று கூறியுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை கைதிகள் 7 பேரை விடுவிக்க கவர்னருக்கு பரிந்துரை செய்வது என்று தமிழக அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்நிலையில், இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளது.

அக்கட்சியின் தலைமை செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகள் விஷயத்தில், மத்திய அரசும், தமிழக அரசும் அரசியல் செய்து வருகின்றன. அந்த பயங்கரவாதிகள், ராஜீவ் மட்டுமின்றி, அப்பாவி மக்களும், போலீசாரும் கொல்லப்பட காரணமானவர்கள். சுப்ரீம் கோர்ட்டால் தண்டிக்கப்பட்டவர்கள்.

இதுவரை அவர்களின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டே வந்துள்ளன. போலி தேசியவாதத்தின் பெயரால் உறுதிமொழி எடுத்துக்கொண்டவர்கள், இந்த விஷயத்தில் அரசியல் செய்து வருகிறார்கள். மத்திய அரசும், அ.தி.மு.க. அரசும் பயங்கரவாதம் விஷயத்தில் மென்மையான அணுகுமுறையை கடைபிடிக்கின்றன. இத்தகைய செயல்கள் மூலம் பயங்கரவாதிகளை பாதுகாத்து வருகின்றன. எனவே, பிரதமர் மோடிக்கும், அவரது அரசுக்கும் உண்மையின் கண்ணாடியை காண்பிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.

பரந்த இதயம் கொண்ட அப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தற்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அவருடைய சகோதரி பிரியங்கா ஆகியோர் ராஜீவ் கொலை கைதிகள் மீது விரோதம் இல்லை என்று கூறி இருக்கலாம். ஆனால், ஒரு குடிமகனாகவும், காங்கிரஸ்காரனாகவும் நாங்கள் எளிமையான ஒரு கேள்வி கேட்கிறோம். ஒரு மாநில அரசின் கடமை, பயங்கரவாதிகளை கண்டுபிடிப்பதா? பாதுகாப்பதா?

அவர்களை விடுவிக்க பா.ஜனதா நியமித்த கவர்னருக்கு பா.ஜனதாவின் கூட்டாளியான அ.தி.மு.க. பரிந்துரை செய்துள்ளது. இதுதான் தற்போது மாநில அரசின் கொள்கையா? அவர்களை விடுவிக்கப்போகிறார்களா? பயங்கரவாதிகளை தண்டிக்கும் கடமையில் இருந்து மாநில அரசு நழுவக்கூடாது என்பதுதான் எங்களது தெளிவான நிலைப்பாடு. இவ்வாறு ரந்தீப் சுர்ஜேவாலா கூறினார்.

மேலும் செய்திகள்