இந்தியாவில் முதல் முறையாக மகாராஷ்டிராவின் பர்பானியில் பெட்ரோல் விலை ரூ.90-ஐ தொட்டது

இந்தியாவில் முதல் முறையாக மகாராஷ்டிரா மாநிலம் பர்பானியில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றிற்கு ரூ.90.05 ஆக விற்பனை செய்யப்படுகிறது. #ParbhaniPetrolPrice

Update: 2018-09-11 03:48 GMT
மும்பை,

பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்தும் நாடு முழுவதும் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதேபோல் இடதுசாரிகள் கட்சிகள் சார்பிலும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டன.பெட்ரோல், டீசல் உயர்வை கண்டித்து மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளிலும் எதிர் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். 

இந்நிலையில் நாடு முழுவதும் நேற்று பாரத் பந்த் போராட்டம் நடைபெற்றாலும், இன்றும் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மேலும் உயர்த்தியுள்ளன. அதன்படி, கிழக்கு மகாராஷ்டிரா பகுதியிலுள்ள பர்பானியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.90.05 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.77.92 ஆகவும் விற்பனையாகின்றன. 

பர்பானியில் நேற்றை நிலவரப்படி பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ. 89.97, டீசல் லிட்டர் ரூ.77.92 என விலை நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், இன்று பெட்ரோல் விலை 8 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.90.05 ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.90-க்கு விற்கப்படுவது இந்தியாவில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் கலால் வரி மற்றும் மாநில அரசின் வாட் வரியின் காரணமாகவே இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அதேபோல், மும்பையில் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.88.26 ஆகவும், டீசல் விலை 15 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.77.47 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

மேலும் செய்திகள்