வசதியற்ற நிலையில் பேருந்து நிலையத்தில் பிச்சை எடுத்து படிக்கும் 9ம் வகுப்பு மாணவன்

மகாராஷ்டிராவில் கல்வியை தொடர வசதியற்ற நிலையில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவன் பேருந்து நிலையத்தில் பிச்சை எடுக்கும் சூழல் உள்ளது.

Update: 2018-09-11 07:17 GMT

நான்டெட்,

மகாராஷ்டிராவின் நான்டெட் நகரில் கஸ்ராலி பகுதியில் வசித்து வரும் தம்பதிக்கு 4 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.  இவர்களின் ஒரு மகனான பவன் கிஷாங்கிர் தேவடே (வயது 15) பிலோலி பகுதியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி பள்ளி கூடத்தில் 9ம் வகுப்பு படித்து வருகிறான்.

பவனின் பெற்றோர் பிச்சை எடுத்து கொண்டு வரும் வருவாயை வைத்தே தங்களது குடும்ப செலவுகளை கவனித்து கொள்கின்றனர்.  இதனால் பவனின் கல்விக்கான செலவுகளை அவர்களால் கவனிக்க முடியவில்லை.

திருவிழாக்களை மற்ற குழந்தைகள் கொண்டாடுவதும் மற்றும் விளையாட்டுகளில் ஈடுபட்டும் வரும் நிலையில், சிறுவன் பவன் தனது குடும்பத்தினரின் செலவுகளுக்காக பேருந்து நிலையத்திற்கு சென்று பிச்சை எடுத்து வருகிறான்.

இதற்காக ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் கழுத்தில் கைக்குட்டையை சுற்றி கொண்டு, பள்ளி சீருடை அணிந்து கொண்டு, கையில் பிச்சை எடுக்கும் கிண்ணம் ஒன்றை வைத்து கொண்டு பேருந்து நிலையத்திற்கு செல்கிறான்.  அங்கு பேருந்திற்காக காத்திருக்கும் பயணிகளிடம் கையை நீட்டி பிச்சை கேட்கிறான்.

அவர்கள், சீருடையில் இருக்கும் பவனுக்கு உதவி செய்யும் விதத்தில் ₹.1 அல்லது ₹.2 என பிச்சை இடுகின்றனர்.

ஆனால் இந்த பணம் அவனது குடும்ப பொருளாதார நெருக்கடியை தீர்க்க உதவிடவில்லை.  இதனால் பிற பொது இடங்களுக்கும் சென்று பவன் பிச்சை எடுத்து வருகிறான்.

பவனின் தலைமையாசிரியர் வினோத் நார்குல்வார் கூறும்பொழுது, பவன் வகுப்பில் நன்றாக படிப்பவன்.  ஆனால் புத்தகங்கள், நோட்டுகள் மற்றும் கல்வி உபகரணங்கள் வாங்க போதிய வசதி அவனிடமில்லை என கூறியுள்ளார்.

இதுபற்றி பவன் கூறும்பொழுது, ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் பிச்சை எடுப்பதில் ₹.200 கிடைக்கிறது.  பண வசதி எந்த நிலையில் இருந்தபொழுதும் முழுவதும் படித்து முடிக்க தீர்மானித்துள்ளேன்.  அதற்காக பிச்சை எடுத்து வருகிறேன் என கூறியுள்ளான்.

மேலும் செய்திகள்