தெலுங்கானா மாநிலத்தில் கோர விபத்து: மலைப்பாதையில் அரசு பஸ் கவிழ்ந்து 57 பேர் பலி

தெலுங்கானா மாநிலத்தில் அரசு பஸ் மலைப்பாதையில் கவிழ்ந்ததில் 36 பெண்கள் உள்பட 57 பேர் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2018-09-11 23:43 GMT
நகரி,

தெலுங்கானா மாநிலம் ஜகித்யாலா மாவட்டத்தில் உள்ள கொண்டகட்டு என்ற இடத்தில் இருந்து ஜகித்யாலாவுக்கு அம்மாநில அரசு போக்குவரத்து பஸ் ஒன்று நேற்று காலை சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் பெத்த பல்லி, ராம்சாகர், ஹிம்மத்பேட்டா உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பெண்கள், முதியோர், மாணவர்கள் என சுமார் 80 பேர் பயணித்தனர்.

அவர்களில் கொண்டகட்டு பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பும் பக்தர்களும் பெரும்பாலானோர் இருந்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் பலர் நின்றுகொண்டே பயணித்தனர். காலை 11 மணி அளவில் வளைவுகள் நிறைந்த கொண்டகட்டு மலைப்பாதையில் பஸ் சென்றுகொண்டிருந்தது.

இன்னும் சில நிமிடங்களில் மலைப்பாதையில் இருந்து பஸ் சமதளத்துக்கு வரவிருந்த நிலையில் எதிர்பாராத விபத்து நடந்தது. கடைசி வளைவு அருகே வந்தபோது எதிரே வந்த ஒரு ஆட்டோ மீது மோதாமல் இருக்க பஸ்சை டிரைவர் அதே வேகத்தில் பக்கவாட்டில் இருந்த வேகத்தடை மீது ஏற்றினார்.

இதில் பஸ் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறியது. பக்கவாட்டில் இருந்த 30 அடி பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து 4 முறை உருண்டு நின்றது. இதில் பல பயணிகள் பஸ்சில் இருந்து தூக்கிவீசப்பட்டு உடல் சிதறினர். பஸ்சுக்குள் இருந்தவர்கள் இருக்கைகளுக்கு இடையே சிக்கி உடல் நசுங்கினர்.

பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். சம்பவ இடத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட 45 பேர் பரிதாபமாக இறந்தனர். தகவல் அறிந்து போலீசார், தீயணைப்பு படையினர், வருவாய்த்துறையினர், ஆம்புலன்சுகளுடன் மருத்துவர்கள் விரைந்தனர்.

அவர்கள் காயமடைந்த சுமார் 30 பேரை மீட்டு பல்வேறு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பிவைத்தனர். இதில் செல்லும் வழியிலும், ஆஸ்பத்திரிகளிலும் 12 பேர் இறந்தனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்தது. இவர்களில் 36 பெண்கள், 12 ஆண்கள், 7 குழந்தைகள். மேலும் 2 பேர் குறித்த விவரம் தெரியவில்லை.

ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றுவருபவர்களில் மேலும் சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. பஸ் டிரைவர் சீனிவாசனின் 2 கால்களும் துண்டானது. அவருக்கு ஜகித்யாலா ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மாநில காபந்து முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ், விபத்தில் இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளதுடன், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்குவதாகவும் அறிவித்தார்.

விபத்து பற்றி தகவல் அறிந்ததும் உயர் அதிகாரிகள், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணிகளை வேகப்படுத்தினர். பலியானவர்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

வழக்கமாக சனிவார பேட்டையில் இருந்து ஜகித்யால வரவேண்டிய இந்த பஸ், கொண்டகட்டு ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அதிகமாக இருந்ததால் சில மாதங்களாக தடை செய்யப்பட்டு இருந்த இந்த மலைப்பாதை வழியாக சென்றுவருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இந்த பாதையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற பஸ் விபத்தில் 12 பேர் இறந்தனர். அதன்பிறகு இப்பாதையில் பஸ் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. வழக்கமான பாதையில் சென்றால் 8 கி.மீ. சுற்றிச்செல்ல வேண்டும் என்பதாலும், ஆஞ்சநேயர் பக்தர்கள் கூட்டம் காரணமாகவும் இந்த பாதையில் பஸ் சென்றதாகவும் சிலர் தெரிவித்தனர்.

ஜகித்யாலா போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்