ஜம்மு காஷ்மீர் : உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைக்கப்பட உள்ளதாக தகவல்

ஜம்மு காஷ்மீரில் உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Update: 2018-09-12 03:11 GMT
ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல்-மே மாதத்தில் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்கள் கடைசியாக நடைபெற்றன. இந்த தேர்தல்களில் சுமார் 80 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன.  இதைதொடர்ந்து, 2016-ம் ஆண்டில் நடக்க வேண்டிய தேர்தல் அப்போது புர்ஹான் வானி என்னும் பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்ற பின்னர் ஏற்பட்ட கலவரம், வன்முறை மற்றும் அமைதியின்மையால் ஒத்திவைக்கப்பட்டது.

தற்போது, அங்கு பதற்றம் தணிந்து, இயல்புநிலை திரும்பியுள்ள நிலையில் வரும் அக்டோபர் முதல் தேதி முதல் ஐந்தாம் தேதிவரை நகராட்சி தேர்தல்களும், நவம்பர் எட்டாம் தேதியில் தொடங்கி பஞ்சாயத்து தேர்தல்களும் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.

ஆனால்,  பிரிவினைவாதிகள் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களை புறக்கணிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தினர்.  தேசிய மாநாட்டு கட்சியின் நிறுவனர் பரூக் அப்துல்லாவும் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தார். அதேபோல், காஷ்மீரில் உள்ளாட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அம்மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தியும் அறிவித்தார். 

ஜம்மு காஷ்மீரின் பிரதான கட்சிகளான இரண்டும் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில், உள்ளாட்சி தேர்தல் வரும் ஜனவரி வரை ஒத்திவைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஜம்மு காஷ்மீர் மாநில கவர்னர் சத்யபால் மாலிக் தலைமையிலான மாநில அறிவுரை கவுன்சில்  எடுக்கும் என்று கூறப்படுகிறது. 

மேலும் செய்திகள்