தேசிய செய்திகள்
300 தொகுதிகளில் வெற்றிப்பெறுவோம்; ராகுல் அமேதி தொகுதியைவிட்டு வெளியேறுவார் - பா.ஜனதா கணிப்பு

காவி கட்சியின் அலை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தன்னுடைய தொகுதியை மாற்ற வேண்டும் என்ற நிலைக்கும் தள்ளும் என பா.ஜனதா தரப்பு தகவல் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

 
2019 பாராளுமன்றத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. 80 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசத்தில் அதிக தொகுதியை பிடிக்க வேண்டும் என்று பா.ஜனதா மற்றும் எதிர்க்கட்சிகள் தரப்பில் வியூகம் வகுக்கப்படுகிறது. காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகள் மகா கூட்டணியை அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது, தொகுதி பங்கீடு தொடர்பாக சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் இடையே சாதகமான பதில்கள் இல்லையென்று கூறப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம் அறிவித்த போதும் இந்த இரு கட்சிகளிடம் இருந்தும் பெரும் ஆதரவு எதுவும் கிடையாது என்றே தெரிந்தது.

இதற்கிடையே உ.பி. மீண்டும் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று வியூகத்துடன் பா.ஜனதாவும் களமிறங்குகிறது. எதிர்க்கட்சிகளின் கூட்டணி பா.ஜனதாவிற்கு பாதகமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. பா.ஜனதாவின் நகர்வு எப்படியிருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்நிலையில் பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் பேசுகையில், “பல்வேறு விஷங்கள் எங்களுக்கு ஆதரவாக இருக்கிறது, பா.ஜனதா கூட்டணி அரசு 3-2 மெஜாரிட்டியை பெறும், பா.ஜனதா மட்டும் 300க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றிப்பெறும்,” என்று தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் கட்சியின் மகா கூட்டணியை சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜ் கட்சியும் ஏற்கவில்லை எனவே காங்கிரஸின் நிலை மோகமாக அமையும். இதனை நான் சொல்ல முடியாது, இருப்பினும் காங்கிரஸ் அமேதி தொகுதியிலும் தோல்வியை தழுவலாம், ராகுல் காந்தி அவருடைய தொகுதியை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்படலாம் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், இப்போது பிரச்சனையாகியுள்ள பெட்ரோல், டீசல் விலையெல்லாம் ஒரு பிரச்சனையாகவும் அமையாது எனவும் குறிப்பிட்டுள்ளார். 

பெட்ரோல், டீசல் விலை மீதான வாட் வரியை குறைப்பது தொடர்பாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மாநில அரசுக்களுடன் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளார், குறிப்பாக பா.ஜனதா ஆளும் மாநிலங்களிடம் வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளார். இருப்பினும் இதுதொடர்பான முடிவை மாநில அரசுக்கள்தான் எடுக்க வேண்டும் என்ற தகவல்கள் தெரிவித்துள்ளன. இதுவரையில் ராஜஸ்தான், ஆந்திரா மற்றும் மேற்கு வங்காளம் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு தொடர்பான நடவடிக்கையை எடுத்துள்ளது.