கன்னியாஸ்திரியை பாலியல் தொழிலாளி என்ற கேரளா எம்.எல்.ஏ. மன்னிப்பு கேட்க மறுப்பு

கன்னியாஸ்திரியை பாலியல் தொழிலாளி என்ற கேரளா எம்.எல்.ஏ. அதற்கு மன்னிப்பு கேட்கமாட்டேன் என கூறியுள்ளார்.

Update: 2018-09-12 12:47 GMT

திருவனந்தபுரம்,

கோட்டயம் குருவிளங்காட்டில் உள்ள தேவாலயம் ஒன்றில் கன்னியாஸ்திரியை பாதிரியார் பிராங்கோ கடந்த 2014 முதல் 2016-ம் ஆண்டுவரையிலான காலங்களில் பலமுறை பலாத்காரம் செய்தார் என்று புகார் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில் பூஞ்சார் தொகுதி சுயேட்சை எம்எல்ஏ பி.சி. ஜார்ஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில் மோசமான கருத்துக்களை தெரிவித்தார். கன்னியாஸ்திரி பாலியல் தொழிலாளி என்பதில் ஏதும் சந்தேகம் உள்ளதா?  

12 முறை பாதிரியார் பலாத்காரம் செய்தார் என்று கன்னியாஸ்திரி புகாரில் தெரிவித்துள்ளார், ஏன் முதல் முறை பலாத்காரம் செய்யப்பட்டவுடன் தெரிவிக்காமல் தாமதமாகக் கூறுகிறார் என்று விமர்சனம் செய்தார் பி.சி. ஜார்ஜ். 

மோசமான விமர்சனத்தை முன்வைத்த பிசி ஜார்ஜுக்கு தேசிய மகளிர் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்தது. பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜார்ஜ், கோபத்தில் பேசியவார்த்தையாகும், பாலியல் தொழிலாளி என்று கூறியதற்கு மன்னிப்பு கேட்கப்போவது கிடையாது என கூறியுள்ளார்.  “என்னை பொறுத்தவரையில் அவர் கன்னியாஸ்திரி கிடையாது. எந்தஒரு பெண்ணையும் பாலியல் தொழிலாளி என்பது தவறானது. இதுபோன்ற வார்த்தைகளை இனி பயன்படுத்த மாட்டேன். ஆனால் அந்த பெண் குறித்து நான் வெளியிட்ட கருத்துக்களில் நான் நிலையாக உள்ளேன்,” என கூறியுள்ளார் பிசி ஜார்ஜ்.

மேலும் செய்திகள்