தேசிய செய்திகள்
நாட்டைவிட்டு புறப்படும் முன் ஜெட்லியை சந்தித்தேன் - மல்லையா; களத்தில் குதித்தது காங்கிரஸ், ‘பொய்’ ஜெட்லி மறுப்பு

வங்கி கடன் மோசடியில் சிக்கியுள்ள விஜய் மல்லையா நாட்டைவிட்டு புறப்படும் முன் நிதியமைச்சரை சந்தித்தேன் என்பது புதிய சர்ச்சையாக வெடித்துள்ளது. #VijayMallya #ArunJaitley

வங்கி

இந்திய வங்கிகள் பலவற்றிலும் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாகக் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாததால் தேடப்பட்டுவரும் குற்றவாளியாக இருக்கும் மல்லையா, லண்டனில் இருக்கிறார். இங்கிலாந்து நாட்டில் தஞ்சம் அடைந்துள்ள அவரை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இதுதொடர்பான வங்கிகளின் வழக்கு விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் நடக்கிறது. இவ்வழக்கில் விஜய் மல்லையா ஜாமீனில் உள்ளார். விஜய் மல்லையா விவகாரத்தில் காங்கிரஸ் - பா.ஜனதா இடையே மோதல் நீடிக்கிறது.

நிதியமைச்சரை சந்தித்தேன்

இன்று இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு லண்டன் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த விஜய் மல்லையா செய்தியாளர்களிடம் பேசினார். 

விஜய் மல்லையா பேசுகையில் “ஜெனிவாவில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க வேண்டியது இருந்தது, இந்தியாவை விட்டு புறப்படும் முன்னதாக நிதியமைச்சரை சந்தித்து பேசினேன். வங்கி கடன்களை செட்டில்மெண்ட் செய்யப்படும் என தெரிவித்தேன். இதுதான் உண்மை. இப்போது அரசு தரப்பில் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை நான் ஏற்க மாட்டேன். கிங்பிஷர் விமானங்கள் தொடர்ந்து பறக்க வேண்டும் என்பதற்காக ரூ.4000 கோடி முதலீடு செய்தோம். ஆனால் குற்றச்சாட்டுகள் வேறு பாதையில் செல்கின்றன. இதனை கோர்ட்டு முடிவு செய்யட்டும்,” என்று கூறியுள்ளார். 

எப்போதும் கூறுவது போன்று அரசியலின் கால்பந்தாகிவிட்டேன். என்னுடைய மனசாட்சி தெளிவாகவே உள்ளது. ரூ. 15,000 கோடி மதிப்புள்ள என் சொத்துக்களை கர்நாடகா நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளேன். பலிகடாவாக உணர்கிறேன். இரு கட்சிகளுக்கும் என்னை பிடிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். மல்லையாவின் இந்த பேச்சு அவர் நாட்டை வீட்டு வெளியேறுவதற்கு முன்னதாக யாரும் உதவினார்களா? என்ற கேள்வியை வலுப்பெற செய்துள்ளது.

விஜய் மல்லையா 2016-ம் ஆண்டு இந்தியாவை விட்டு வெளியேறும் போது நிதியமைச்சராக இருந்தவர் அருண் ஜெட்லிதான், இப்போதும் அவர்தான் நிதியமைச்சராக உள்ளார். 
 
காங்கிரஸ் கேள்வி

விஜய் மல்லையா நிதியமைச்சரை சந்தித்தேன் என்று பேட்டியளித்ததும் இவ்விவகாரத்தை கையிலெடுத்துள்ள காங்கிரஸ், சந்திப்பில் யார் இருந்தது என்பதை விளக்குமாறு மத்திய அரசுக்கு கேள்வியை எழுப்பியுள்ளது. விஜய் மல்லையா எப்படி இந்தியாவை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டார்? ஜெட்லியை மல்லையா சந்தித்த விவரங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

 “மல்லையா மற்றும் ஜெட்லி சந்திப்பின்போது பேசப்பட்டது என்ன என்பது தேச மக்களுக்கு தெரியவேண்டும்.” அரசு விளக்கம் தெரிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறியுள்ளார். விஜய் மல்லையா மட்டும் கிடையாது நிரவ் மோடி, மெகுல் சோக்‌ஷி மற்றும் பிறரும் நாட்டைவிட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதைதான் காங்கிரஸ் 18 மாதங்களாக வலியுறுத்தி வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். பிற எதிர்க்கட்சிகளும் அரசிடம் இருந்து விளக்கம் கோரியுள்ளது.

ஜெட்லி மறுப்பு

விஜய் மல்லையாவிடம் இருந்து இதுபோன்ற பேட்டி வெளியாகியதும் அருண் ஜெட்லி மறுப்பு தெரிவித்துள்ளார். “2014-ம் ஆண்டிலிருந்து நான் அவருக்கு (விஜய் மல்லையா) என்னை சந்திக்க அனுமதியை அளிக்கவில்லை. நான் அனுமதி அளிக்காத நிலையில் அவரை சந்தித்தேன் என்ற கேள்விக்கே இடம் கிடையாது,” என்று ஜெட்லி கூறியுள்ளார். விஜய் மல்லையாவின் கூற்று பொய் என்று கூறியுள்ளார் அருண் ஜெட்லி. விஜய் மல்லையாவின் பேட்டி விவகாரத்தில் காங்கிரஸை அடுத்து பிற கட்சிகளும் கேள்வியை எழுப்பி வருகிறது.  

இதற்கிடையே கிங்பிஷ்ருக்கு ஏற்பட்ட நஷ்டங்களை ஐடிபிஐ அதிகாரிகள் நன்கு அறிவார்கள். ஐடிபிஐ அதிகாரிகளின் மின்னஞ்சல்களை வைத்துப் பார்க்கும் போது நஷ்டங்களை மல்லியா மறைத்தார் என்ற அரசுதரப்புக் குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரங்கள் இல்லை என்று லண்டன் நீதிமன்றத்தில் விஜய் மல்லையாவின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.