விஜய் மல்லையாவை நாடு கடத்தும் வழக்கில் லண்டன் கோர்ட்டு டிசம்பர் 10-ம் தேதி தீர்ப்பு வழங்குகிறது

விஜய் மல்லையாவை நாடு கடத்தும் வழக்கில் லண்டன் கோர்ட்டு டிசம்பர் 10-ம் தேதி தீர்ப்பை வழங்குகிறது. #VijayMallya

Update: 2018-09-12 14:47 GMT

லண்டன்,


இந்திய வங்கிகள் பலவற்றிலும் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாகக் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாததால் தேடப்பட்டுவரும் குற்றவாளியாக இருக்கும் மல்லையா, லண்டனில் இருக்கிறார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தக் கோரி லண்டன் பெருநகர கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்திய அதிகாரிகள் தரப்பிலும், மல்லையா தரப்பிலும் நீதிமன்றத்தில் வாதங்கள் முன்வைக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே விஜய் மல்லையா இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டால், வழக்கு விசாரணையின் போதும், அவரை இந்திய நீதிமன்றங்கள் தண்டித்தாலும் மும்பை ஆர்தர் சாலையில் உள்ள மத்திய சிறையில் அவரை அடைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அவரை அடைக்கும் சிறையின் வீடியோவை தாக்கல் செய்யவும் லண்டன் கோர்ட்டு உத்தரவிட்டது, இந்திய அரசின் தரப்பில் சமர்பிக்கப்பட்டது. 

இதையடுத்து, இந்த வழக்கின் இறுதிவாதம் இன்று நடைபெற்றது. விசாரணையின் போது “கிங்பிஷ்ருக்கு ஏற்பட்ட நஷ்டங்களை ஐடிபிஐ அதிகாரிகள் நன்கு அறிவார்கள். ஐடிபிஐ அதிகாரிகளின் மின்னஞ்சல்களை வைத்து பார்க்கும் போது நஷ்டங்களை மல்லியா மறைத்தார் என்ற அரசுதரப்பு குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரங்கள் இல்லை. ஏமாற்றுவதற்காக மல்லையா வங்கிக் கடன் கோரியதாக கூறப்படுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை,” என்று தெரிவிக்கப்பட்டது.  

கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, கடன் பெறுவதற்காக மல்லையாவும், ஐடிபிஐ வங்கியின் துணை மேலாண் இயக்குநர் பி.கே.பத்ராவும் இணைந்து கூட்டு சதியில் ஈடுபட்டதாக சில ஆதாரங்களை சிபிஐ தாக்கல் செய்தது. அந்த ஆதாரங்கள் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளன என்று நீதிமன்றம் கூறியிருந்தது. இருதரப்பு விசாரணையும் முடிந்த நிலையில் மல்லையாவை நாடு கடத்தும் விவகாரத்தில் டிசம்பர் 10-ம் தேதி கோர்ட்டு தீர்ப்பு வழங்குகிறது. 10-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி எம்மா அர்பத்நாத் கூறியுள்ளார். 
 
 வழக்கில் இந்திய அரசுக்கு சாதகமாக தீர்ப்பு அளிக்கப்பட்டால் மல்லையாவை நாடு கடத்தும் உத்தரவில் இங்கிலாந்து உள்துறை அமைச்சர் இரண்டு மாதங்களில் கையெழுத்திடுவார். தீர்ப்புக்கு எதிராக அமைந்தால் இந்திய அரசு, மல்லையா ஆகிய இரு தரப்பினரும் லண்டன் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியும்.  

மேலும் செய்திகள்