ரூ.3.16 லட்சம் கோடி வங்கிக் கடன் தள்ளுபடி - மோடி மீது ராகுல்காந்தி புதிய குற்றச்சாட்டு

ரூ.3.16 லட்சம் கோடி வங்கிக் கடன் தள்ளுபடி செய்ததாக மோடி மீது ராகுல்காந்தி புதிய குற்றச்சாட்டு ஒன்றை கூறியுள்ளார்.;

Update:2018-10-02 04:45 IST
புதுடெல்லி,

மோடி அரசு 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் மேற்கொண்ட பண மதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

பண மதிப்பு நீக்க நடவடிக்கையில் மோடியின் இந்தியா, சாதாரண மக்கள் பணத்தை வங்கியில் செலுத்துவதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கவேண்டும், உங்களைப் பற்றிய அனைத்து தகவல்களும் ஆதாருக்குள் இருக்கும். ஆனால் உங்களால் அந்த பணத்தை பயன்படுத்த முடியாது என்பதாக இருந்தது.

அதேநேரம் பெரும் பணக்காரர்களுக்கான மோடியின் இந்தியா, அவர்களுக்கு கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றிக்கொள்வதற்கு உதவியாக இருந்தது. சாதாரண மக்களின் ரூ.3.16 லட்சம் கோடியை பயன்படுத்தி பெரும் பணக்காரர்களின் வாராக்கடனை தள்ளுபடி செய்வதாக இருந்தது என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.

‘கடந்த 4 ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகள் ரூ.3.16 லட்சம் கோடி வாராக்கடன்களை தள்ளுபடி செய்து உள்ளன. ஆனால் வங்கிகள் வசூலித்த கடன் தொகையான ரூ.44,900 கோடியை விட இது 7 மடங்கு அதிகம்’ என்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவலை சுட்டிக்காட்டி ராகுல்காந்தி இவ்வாறு குற்றம் சாட்டினார்.

மேலும் செய்திகள்