விஜய் மல்லையாவை திருடன் எனக்கூறுவது நியாயமற்றது: கட்காரி கருத்தால் சலசலப்பு

ஒரு கடனை அடைக்காததால் மல்லையாவை திருடன் எனக்கூறுவது நியாயமற்றது என்று நிதின் கட்காரி கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2018-12-14 05:25 GMT
மும்பை,

பொதுத்துறை வங்கிகளில் ரூ. 9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வாங்கிய நாடறிந்த தொழில் அதிபர் விஜய் மல்லையா, வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய தொகையை கொடுக்காமல் லண்டனில் தஞ்சம் அடைந்தார். விஜய்  மல்லையாவை நாடு கடத்தக்கோரி, மத்திய அரசு தாக்கல் செய்த மனு மீது விசாரணை நடத்திய லண்டன் நீதிமன்றம், விஜய் மல்லையாவை நாடு கடத்த உத்தரவிட்டது. லண்டன் நீதிமன்ற தீர்ப்பால் விஜய் மல்லையா கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளார். 

மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நிதின் கட்காரி கூறியதாவது:- “கடந்த 40 வருடமாக விஜய் மல்லையா தான் வாங்கிய கடன்களுக்கான வட்டியை முறையாக கட்டியிருக்கிறார். விமானத்துறைக்குள் நுழைந்ததும்தான் அவர் பல பிரச்சினைகளை சந்தித்துள்ளார்.

இதனால் கடனை அவரால் அடைக்க முடியாமல் போயுள்ளது. இதற்காக அவர் திருடன் ஆகி விடுவாரா? 50 வருடம் வாங்கிய கடனை எல்லாம் முறையாக அடைக்கும் ஒருவர், ஒரு கடனை மட்டும் அடைக்காமல் போகும்போது அவரை திருடன் என்று கூறுவது நியாயமானதாக இல்லை. வியாபாரத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படத்தான் செய்யும். ஒருவர் கீழே விழும்போது மற்றவர்கள் அவருக்கு உதவ வேண்டும், ஆதரவாக இருக்க வேண்டும்” இவ்வாறு கட்காரி கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்