சிபிஐ புதிய இயக்குநராக ரிஷிகுமார் சுக்லா பொறுப்பேற்பு

சிபிஐ அமைப்பின் புதிய இயக்குநராக ரிஷிகுமார் சுக்லா பொறுப்பேற்றுக் கொண்டார்.

Update: 2019-02-04 05:33 GMT
புதுடெல்லி,

சிபிஐயின் இயக்குநர் அலோக் வர்மாவும், சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவும் ஒருவர் மீது ஒருவர் சரமாரி ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறியதையடுத்து, அவர்கள் இருவரையும் மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியது. சிபிஐ இணை இயக்குநர் நாகேஸ்வர ராவை தற்காலிக சிபிஐ இயக்குநராகவும் மத்திய அரசு நியமித்தது.

இதை எதிர்த்து, சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், மத்திய அரசின் உத்தரவு செல்லாது என்றும், அலோக் வர்மா மீண்டும் இயக்குநர் பதவியைத் தொடரலாம் என்றும் கடந்த 10-ம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டது.

எனினும், அலோக் வர்மா குறித்த இறுதி முடிவைப் பிரதமர் தலைமையிலான உயர்நிலைக் குழு முடிவு செய்யும் என்று தெரிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து, அலோக் வர்மாவைப் பதவி நீக்கம் செய்து பிரதமர் மோடி தலைமையிலான உயர் நிலைக்குழு அதிரடியாக அறிவித்தது.

இதைத்தொடர்ந்து, சிபிஐ இயக்குநரை தேர்வு செய்வதற்காக மோடியின் இல்லத்தில் புதிய இயக்குநரைத் தேர்வு செய்யும் கூட்டம் நடந்தது. இதில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில், சிபிஐயின் புதிய இயக்குனராக ரிஷிகுமார் சுக்லா தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில், ரிஷிகுமார் சுக்லா இன்று சிபிஐ இயக்குநராக முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். ரிஷிகுமார் சுக்லா, இரண்டு ஆண்டு காலம் பதவி வகிப்பார் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ரிஷி குமார் சுக்லா கடந்த 1983-ம் ஆண்டு ஐபிஎஸ் பதவிக்கு தேர்வானவர், மத்திய பிரதேசத்தில் டிஜிபியாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்