திரிணாமுல் காங்கிரஸ் போராட்டம் காரணமாக பாராளுமன்றம் முடங்கியது

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியால் பாராளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.;

Update:2019-02-04 14:51 IST
புதுடெல்லி,

சாரதா சிட்பண்ட்ஸ் மோசடி வழக்கில் கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரிக்க நேற்று சிபிஐ அதிகாரிகள் சென்றனர். அப்போது கொல்கத்தா போலீசாருக்கும், சிபிஐ அதிகாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்த மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இவ்விவகாரம் இன்று பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது. 

மேற்கு வங்காளத்திற்கு சிபிஐ அதிகாரிகள் செல்ல எதிர்ப்பு தெரிவித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் பாராளுமன்ற இரு அவைகளிலும் அமளியை ஏற்படுத்தினர். மேற்கு வங்காளத்தை அரசியல் ரீதியாக  கைப்பற்ற சிபிஐயை மத்திய அரசு பயன்படுத்துகிறது என திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியது. 

மக்களவையில் இவ்விவகாரம் தொடர்பாக அவை அவ்வப்போது ஒத்திவைக்கப்பட்ட நிலையில் 2 மணிக்கு மீண்டும் கூடியது. அப்போதும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. 

காங்கிரஸ் உறுப்பினர்கள் ரபேல் விவகாரத்தை முன்வைத்து அமளியில் ஈடுபட்டனர். இதே போன்று மாநிலங்களவையிலும் அரசியல் கட்சியின் உறுப்பினர்கள் தங்களுடைய கோரிக்கையை முன்வைத்து அமளியில் ஈடுபட்டதால் அவை முடங்கியது. 2 மணிக்கு அவை தொடங்கியதும் கூச்சல், குழப்பம் அதிகரித்தது. இதனால் பாராளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்