மம்தாவுக்கு ஆதரவு தெரிவித்த ராகுலின் எதிர்மறை டுவிட்டர் பதிவை வெளியிட்டு பா.ஜ.க. பதிலடி
மம்தாவின் தர்ணா போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த ராகுலின் எதிர்மறை டுவிட்டர் பதிவை வெளியிட்டு பா.ஜ.க. பதிலடி கொடுத்துள்ளது.;
சாரதா சிட்பண்ட், ரோஸ்வேலி சிட்பண்ட் மோசடி வழக்கு தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ்குமாரிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிராக முதல் மந்திரி மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் இறங்கினார். இதற்கு பல்வேறு எதிர்க்கட்சியினர் ஆதரவு தெரிவித்தனர்.
இதற்கு காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியும் ஆதரவு கரம் நீட்டினார். இதையடுத்து, கடந்த 2014ம் ஆண்டில் சாரதா சிட்பண்ட் மோசடியில் மம்தாவின் தொடர்பு குறித்து, சமூக வலைதளங்களில் ராகுல் பதிவிட்ட பழைய கருத்துகளை பாரதீய ஜனதா கட்சி தற்போது வெளியிட்டுள்ளது.
அதில், 20 லட்சம் அப்பாவிகள் பணத்தை இழந்துள்ளனர் எனவும், இந்தியாவின் பெரிய ஊழல் சாரதா சிட்பண்ட் எனவும் 2014 நாடாளுமன்ற தேர்தலின்போது ராகுல் பேசியதையும் அக்கட்சி சுட்டிக்காட்டி பதிலடி கொடுத்து வருகிறது.