சிபிஐ முன்னாள் இடைக்கால இயக்குநர் நாகேஸ்வர ராவுக்கு சுப்ரீம் கோர்ட் அபராதம் - கண்டனம்

அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்த வழக்கில் சிபிஐ முன்னாள் இடைக்கால இயக்குநர் நாகேஸ்வர ராவுக்கு அபராதம் விதித்து கடும் கண்டனத்தையும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்து உள்ளது.

Update: 2019-02-12 08:29 GMT
புதுடெல்லி,

பீகாரின் முசாபர்பூர் நகரில் காப்பகத்தில் சிறுமிகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கை, சுப்ரீம் கோர்ட்  உத்தரவுப்படி சிபிஐ விசாரித்து வருகிறது. இதேபோல, பீகாரில் சிறார்கள், பெண்கள், முதியோர் காப்பகங்களில் நடைபெற்ற அத்துமீறல்கள் தொடர்பான 16 வழக்குகளையும் சிபிஐ சேர்த்து விசாரிக்க கடந்த நவம்பரில் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட்டின்  முன்அனுமதி பெறாமல் வழக்கை விசாரிக்கும் அதிகாரிகளை மாற்றக்கூடாது என்றும் சுப்ரீம் கோர்ட் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால்  சிபிஐ விசாரணை அதிகாரி ஏ.கே.சர்மா பணியிடமாற்றம் செய்யப்பட்டார். 

விசாரணை அதிகாரிகளை மாற்றக்கூடாது என்ற சுப்ரீம் கோர்ட்  உத்தரவை மீறியதாக தொடரப்பட்ட வழக்கில் கோர்ட்  உத்தரவை மீறும் வகையில் அதிகாரியை  பணியிடமாற்றம் செய்ததற்கு தலைமை நீதிபதி அமர்வு கடும் அதிருப்தி தெரிவித்திருந்தது. இதை மிகவும் தீவிரமான பிரச்சினையாக எடுத்துக் கொள்ளப் போவதாகக் கூறிய தலைமை நீதிபதி அமர்வு, சுப்ரீம் கோர்ட்  உத்தரவோடு  விளையாடியவர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.

சுப்ரீம் கோர்ட்  உத்தரவோடு ஒருபோதும் விளையாட வேண்டாம் என சிபிஐயை எச்சரித்த நீதிபதிகள், ஏ.கே.சர்மாவை பணியிட மாற்றம் செய்ததன் மூலம் நாகேஸ்வரராவ் நீதிமன்றத்தை அவமதித்திருப்பதாக கருதுவதற்கு முகாந்திரம் உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தனர். 

இதையடுத்து நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி, நாகேஸ்வரராவ் சுப்ரீம் கோர்ட்டில்  நேற்று உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்தார். மேலும் சுப்ரீம் கோர்ட்  ஏற்கனவே உத்தரவிட்டிருந்தபடி இன்று நேரிலும் ஆஜராகி, தமது மன்னிப்பை ஏற்கும்படி கேட்டார்.

நாகேஸ்வரராவ் மன்னிப்பு கோரியதை ஏற்க மறுத்துவிட்ட சுப்ரீம் கோர்ட், அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது. நீதிமன்றத்திலேயே இன்றைய அலுவல்கள் முடியும் வரை ஒரு மூலையில் அமர்ந்திருக்குமாறும் நாகேஸ்வரராவுக்கு அதிரடியாக தண்டனை விதித்து உள்ளது. 

மேலும் செய்திகள்