நிரவ் மோடியை கைது செய்ய லண்டன் நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்தது

வைர வியாபாரி நிரவ் மோடியை கைது செய்ய லண்டன் நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்து உள்ளது.

Update: 2019-03-18 16:23 GMT
லண்டன்,

குஜராத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி (வயது 48).  மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலம் சுமார் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுபற்றிய விசாரணை தொடங்குவதற்கு முன்பே நிரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தினர் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிவிட்டனர்.  இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிரவ் மோடியை கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க சர்வதேச போலீசின் உதவியை மத்திய அரசு நாடியது. அதன்படி நிரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீசை சர்வதேச போலீசாரும் பிறப்பித்து உள்ளனர். 

சில நாட்களுக்கு முன் லண்டனின் மேற்கு முனை பகுதியில் உள்ள சுமார் ரூ.75 கோடி மதிப்பிலான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 3 படுக்கை வசதி கொண்ட வீட்டிற்கு அவர் குடிபெயர்ந்து உள்ளார்.  அதன் வாடகையே மாதத்துக்கு சுமார் ரூ.15 லட்சம் ஆகும்.

இந்த வழக்கில் இங்கிலாந்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் நிரவ் மோடியை கைது செய்ய வாரண்ட் ஒன்றை பிறப்பித்து உள்ளது.  இதனால் அவர் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்படலாம் என கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்