பி.எம்.நரேந்திர மோடி படத்துக்கு தடை விதிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்

பிரதமர் நரேந்திர மோடி குறித்த பி.எம். நரேந்திர மோடி படத்தை வெளியிட தடையில்லை என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.;

Update:2019-04-01 14:23 IST
புதுடெல்லி,

பிரதமர் நரேந்திரமோடி வாழ்க்கையை மையமாக வைத்து ‘பி.எம்.நரேந்திரமோடி’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் மோடியின் கதாபாத்திரத்தில் நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார். பிரபல குத்துச்சண்டை வீராங்கனை ‘மேரிகோம்’ வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட ‘மேரிகோம்’ படத்தை இயக்கிய ஓமங்க் குமார் இந்த படத்தை இயக்கி உள்ளார். மோடியின் இளமை காலத்து வாழ்க்கை முதல் 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் வென்று நாட்டின் பிரதமர் ஆனது வரை உள்ள சம்பவங்கள், அவர் ஆட்சியில் நிறைவேற்றிய திட்டங்கள் உள்ளிட்டவை படத்தில் இடம்பெற்றுள்ளன.

இந்த படம் வரும் ஏப்ரல் 5-ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதேசமயம், மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக மே 19-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதன் வாக்கு எண்ணிக்கை மே 23-ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த படம் வாக்குப்பதிவுக்கு 6 தினங்கள் முன்பு வெளியாவதால், வாக்காளர்கள் மத்தியில் இது தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

இந்நிலையில், தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால் பி.எம்.நரேந்திரமோடி படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு  தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான வழக்கு இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.  மனு மீதான வழக்கை விசாரித்த நீதிமன்றம் பிரதமர் நரேந்திர மோடி குறித்த பி.எம். நரேந்திர மோடி படத்தை வெளியிட தடையில்லை என உத்தரவிட்டது.  

மேலும் பி.எம் நரேந்திர மோடி படத்துக்கு தடை விதிக்க கோரிய பொதுநல மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மேலும் செய்திகள்