பி.எஸ்.எல்.வி. சி-45 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது - முதல் முறையாக 3 புவிவட்டப்பாதையில் செயற்கைகோள்களை நிலைநிறுத்தி சாதனை

பி.எஸ்.எல்.வி. சி-45 ராக்கெட் நேற்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. முதல்முறையாக 3 புவிவட்டபாதையில் செயற்கைகோள்களை நிலை நிறுத்தி சாதனை படைத்துள்ளது.;

Update:2019-04-02 04:15 IST
ஸ்ரீஹரிகோட்டா,

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயற்கைகோள்களையும், அவற்றை விண்ணில் ஏவுவதற்காக பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ஆகிய இருவகை ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகிறது. தற்போது எடைகுறைந்த செயற்கைகோள்களை விண்ணில் செலுத்துவதற்காக புதிய வகையில் எடை குறைந்த ராக்கெட்டையும் தயாரித்து வருகிறது. இதில் பூமியை கண்காணிப்பது, தொலையுணர்வு தகவல்களை பெறுவது, கடல்சார் ஆராய்ச்சி, தகவல் தொடர்பு மற்றும் வானிலை பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக செயற்கைகோள்களை இஸ்ரோ வடிவமைத்து வெற்றிகரமாக விண்வெளிக்கு செலுத்தி வருகிறது.

இந்தநிலையில் பாதுகாப்புத்துறை பயன்பாட்டுக்கான 436 கிலோ எடை கொண்ட ‘எமிசாட்’ என்ற செயற்கைகோளை இஸ்ரோ தயாரித்து உள்ளது. இதனுடன், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமும், அதன் வணிகக் கிளையுமான ‘ஆண்டிரிக்ஸ்’ நிறுவனமும் இணைந்து, லித்துவேனியா நாட்டுக்கு சொந்தமான 2 செயற்கைகோள்கள், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து நாடுகளுக்கு சொந்தமான தலா 1 செயற்கைக்கோள்கள் மற்றும் அமெரிக்கா நாட்டை சேர்ந்த 24 செயற்கைகோள்கள் உட்பட 28 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்துவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருந்தனர். இந்த செயற்கைகோள்கள் உட்பட 29 செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்ப இஸ்ரோ முடிவு செய்தது.

அதன்படி, சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-45 ராக்கெட் 27 மணி நேர ‘கவுண்ட்டவுனை’ முடித்துக்கொண்டு செயற்கைகோள்களை சுமந்தபடி நேற்று காலை 9.27 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

பி.எஸ்.எல்.வி. சி-45 ராக்கெட்டின் முதல் நிலையில் திட எரிபொருளும், 2-ம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பப்பட்டு இருந்தது. 44.4 மீட்டர் உயரம் கொண்ட பி.எஸ்.எல்.வி. சி-45 ராக்கெட்டின் எடை சுமார் 230.4 டன் ஆகும். புறப்பட்ட 17 நிமிடம் 18 வினாடிகளில் ராக்கெட் பூமியில் இருந்து திட்டமிட்ட அந்த உயரத்தை அடைந்ததும் ராக்கெட்டின் என்ஜின் நிறுத்தப்பட்டது.

பின்னர் பூமி கண்காணிப்புக்கான ‘எமிசாட்’ செயற்கைகோளை சூரிய வழி சுற்றுப்பாதையில் 749-வது கிலோ மீட்டர் தூரத்தில் நிலை நிறுத்தப்பட்டது. தொடர்ந்து ராக்கெட்டின் என்ஜின் மீண்டும் இயக்கப்பட்டு வெளிநாடுகளை சேர்ந்த 28 செயற்கைகோள்களையும் 2 மணி நேர இடைவெளியில் பி.எஸ்.எல்.வி. சி-45 ராக்கெட் திட்டமிட்டபடி 3 புவிவட்டப்பாதையில் 504 கிலோ மீட்டர் தூரத்தில் கொண்டு சேர்த்தது.

இந்த பயணத்தில் முதல் இரண்டு நிலைகள் எரிந்து முடிந்ததும், மூன்றாவது மற்றும் நான்காவது நிலையில் பொருத்தப்பட்டு இருந்த என்ஜின் வெற்றிகரமாக இயங்கி செயற்கைகோள்களை விண்வெளியில் வேறுபட்ட சுற்றுப்பாதையில் குறிப்பிட்ட உயரத்துக்கு கொண்டு சென்று புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தியது. இதில் 4-வது நிலை உயரத்திற்கு இயக்குவதற்காக ராக்கெட் என்ஜின் 485 கிலோ மீட்டர் உயரத்தில் 4 முறை நிறுத்தப்பட்டு, மீண்டும் இயக்கி பார்த்து சோதிக்கப்பட்டது. இந்த சோதனையும் வெற்றிகரமாக இருந்து உள்ளது.

ராக்கெட் வெற்றிகரமாக பறந்ததும், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் கூடி இருந்த விஞ்ஞானிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய தலைவர் கே.சிவன், இஸ்ரோ விஞ்ஞானிகள், என்ஜினீயர்கள் மற்றும் ஊழியர்களுடன் கைகுலுக்கி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டார்.

ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுவதை பார்வையிட ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ அலுவலக கட்டிடங்களில் இஸ்ரோ அதிகாரிகளின் குடும்பத்தினரும், பத்திரிகையாளர்களும் கூடி இருந்தனர். இவர்களுடன், புதிதாக திறக்கப்பட்ட பார்வையாளர்கள் கேலரியில் அமர்ந்து இருந்து சுமார் ஆயிரம் பார்வையாளர்களும் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:-

பூமி கண்காணிப்புக்காக வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ள இந்த ராக்கெட் பி.எஸ்.எல்.வி. ரகத்தில் 47-வது ராக்கெட்டாகும். இதேபோன்று இந்த ராக்கெட்டுக்கு பல்வேறு சிறப்புகள் உள்ளன. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் 71-வது ராக்கெட் என்ற பெருமையையும், பி.எஸ்.எல்.வி- கியூ ரகத்தில் முதல் ராக்கெட் ஆகும்.

‘எமிசாட்’ செயற்கைகோள் 749 கிலோ மீட்டர் உயரத்தில் 98.376 டிகிரி புவிவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டு உள்ளது. இதனுடைய ஆயுட்காலம் 5 ஆண்டுகள் ஆகும். பூமி கண்காணிப்பு, பாதுகாப்புத்துறை பயன்பாட்டுக்காகவும், ரேடார் நெட்வொர்க்கை கண்காணிப்பதற்காகவும், தகவல்களை இந்த செயற்கைகோள் படம் பிடித்து அனுப்பும். அத்துடன் வானொலி பயன்பாட்டுக்கு தேவையான தகவல்களையும் அளிக்கிறது. மின்காந்த நிறமாலை அளவீடு செய்வதற்காக பயன்படுகிறது.

இந்த செயற்கைக்கோள் மின்காந்த அலைகள் மூலம் இயங்கும். இதற்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்காக சூரிய மின் தகடுகளும் பொருத்தப்பட்டு உள்ளன. முதன்முறையாக ராக்கெட்டின் 4-வது நிலையில் இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகம், அமெச்சூர் ரேடியா செயற்கைக்கோள் நிறுவனம், இஸ்ரோ ஆகியவை தயாரித்த பரிசோதனை கருவிகள் முதன்முதலாக பொருத்தப்பட்டு இருந்தன.

இந்த கருவிகளின் ஆயுட்காலம் 6 மாதங்கள் ஆகும். பொதுவாக ராக்கெட்டின் முதல்நிலையில் ராக்கெட்டின் எடைக்கு ஏற்ப 6 உந்துவிசை அளிக்கும் மின் மோட்டார்கள் பொருத்தப்படுவது வழக்கம். ஆனால் இந்த ராக்கெட்டில் எடைக்குறைவான செயற்கைக்கோள் இருந்ததால் முதன்முறையாக இந்த ராக்கெட்டில் 4 உந்துவிசை அளிக்கும் மின்மோட்டார்கள் பொருத்தப்பட்டு இருந்தது. இந்த சோதனையும் வெற்றிகரமாக இருந்தது.

இதில் 800 வால்ட் திறன் கொண்ட மின்மோட்டார் மற்றும் இதில் உள்ள அதிநவீன படம் பிடிக்கும் கருவி பல கோணங்களில் படம் பிடித்து அனுப்பும் சிறப்புத்தன்மை கொண்டது. தொடர்ந்து வெளிநாடுகளை சேர்ந்த 28 செயற்கைகோள்களும் 220 கிலோ எடை கொண்டவை.

இந்த செயற்கைகோள்கள் 504 கிலோ மீட்டர் உயரத்தில் 97.468 டிகிரியில் திட்டமிட்டப்படி இலக்கில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. ராக்கெட் பூமியில் இருந்து புறப்பட்டு 2 மணி நேரத்தில் அனைத்து வணிக ரீதியிலான செயற்கைகோள்களையும் வெற்றிகரமாக நிலை நிறுத்தியது பெருமிதமாக உள்ளது.

பொதுவாக ஒன்று அல்லது 2 புவிவட்டப்பாதையில் தான் செயற்கைகோள்களை ராக்கெட்டுகள் நிலை நிறுத்துவது வழக்கம். ஆனால் இந்த ராக்கெட் முதன் முறையாக வெவ்வேறு வகையான 3 புவிவட்டப்பாதையில் செயற்கைக்கோள்களை நிலை நிறுத்தி சாதனை படைத்து உள்ளது. இதனை தொடர்ந்து பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் மூலம் புவி கண்காணிப்புக்காக ‘ரீசாட் 2பிஆர்’ செயற்கைக்கோளும், பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட்டில் ரேடார் பயன்பாட்டுக்காக கார்டோசாட்-3 செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்பட உள்ளன.

இதற்கான பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளன. விண்வெளியில் இஸ்ரோவின் சாதனைகள் தொடரும். இதன் மூலம் நாட்டில் அறிவியல் ரீதியான வளர்ச்சி மேலும் அதிகரிக்கும். இவ்வாறு விஞ்ஞானிகள் கூறினார்கள்.

இந்த ஆண்டுக்குள் 30 விண்வெளி திட்டங்கள் முடிக்கப்படும்  - ‘இஸ்ரோ’ தலைவர் சிவன் தகவல்

ராக்கெட் வெற்றிகரமாக செலுத்தப்பட்டு செயற்கைக்கோள்கள் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. முதன்முறையாக மூன்று வெவ்வேறு சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. ராக்கெட்டின் நான்காவது நிலை மீண்டும் ரீ-ஸ்டார்ட் செய்யப்பட்டு 485 கிலோமீட்டர் தூரத்தில் சோதனை முயற்சிக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நான்காவது நிலை சோதனை முயற்சியில் மூன்று முக்கிய செயற்கைகோள் உள்ளன. குறிப்பாக ஐ.ஐ.எஸ்.டி. மாணவர்களது செயற்கைகோள் இதில் செலுத்தப்பட்டுள்ளது. நான்காவது நிலை சோதனை முயற்சி, மாணவர்களது ஆராய்ச்சி திறனை வளர்க்கும் வகையில் இலவசமாக இஸ்ரோ செய்து வருகிறது. பி.எஸ்.எல்.வி. சி-45 வெற்றிக்கு உழைத்த இஸ்ரோ குழுவுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் வாழ்த்துக்கள்.

95 சதவீத ராக்கெட் தயார் செய்ய தேவையான பொருட் கள் மற்றும் 60-70 சதவீத உதிரிபாகங்கள் பெங்களூருவில் உள்ள தொழிற்சாலையில் வாங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்களும் இந்த திட்டத்திற்கு பெரிதும் உதவியுள்ளனர். மேலும் இந்த ராக்கெட் ஏவுதலை 1,200 பொதுமக்கள் நேரடியாக கண்டு களித்தனர். அடுத்த ராக்கெட் ஏவுதலை 5 ஆயிரம் பேர் பார்க்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது மேலும் 10 ஆயிரமாக அதிகரிக்கும்.

வரும் மே மாதம் 2-வது வாரத்துக்கு மேல் எட்டாம் வகுப்பு முடித்துள்ள 108 மாணவர்கள் இந்தியா முழுவதும் தேர்வு செய்யப்பட்டு பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தலைமையகத்துக்கு வரவுள்ளனர். அவர்களுக்கு 15 நாட்கள் பயிற்சியாக விண்வெளி தொழில்நுட்பம், ராக்கெட் தொழில்நுட்பம், செயற்கைக்கோள்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இதன் மூலம் அடுத்த தலைமுறை விஞ்ஞானிகள் உருவாகுவர். மே மாத நடுவில் பி.எஸ்.எல்.வி. சி-46, அடுத்து பி.எஸ்.எல்.வி. சி-47 மேலும் சந்திரயான்-2 ஆகிய திட்டங்கள் உள்ளன. இந்த வருடத்துக்குள் 30 விண்வெளி திட்டங்களை முடிக்க திட்டமிட்டு உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்