ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு: குற்றப்பத்திரிகை தகவல் வெளியானது எப்படி? விசாரணை கேட்டு கோர்ட்டில் இடைத்தரகர் மனு
“ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில், துணை குற்றப்பத்திரிகையில் உள்ள தகவல்கள் ஊடகங்களில் வெளியானது எப்படி?” என்பது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று டெல்லி கோர்ட்டில் இடைத்தரகர் மனு தாக்கல் செய்தார்.;
புதுடெல்லி,
மத்தியில் மன்மோகன்சிங் தலைமையில் காங்கிரஸ் கூட்டணி அரசு பதவியில் இருந்தபோது, ஜனாதிபதி, பிரதமர், உள்துறை மந்திரி போன்ற தலைவர்கள் பயணம் செய்வதற்காக இத்தாலியின் அகஸ்டாவெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து 12 அதிநவீன ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது.
ரூ.3,600 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தம் கிடைப்பதற்காக அரசியல்வாதிகள் முதல் அதிகாரிகள் வரை அகஸ்டாவெஸ்ட்லேண்ட் நிறுவனம் லஞ்சம் கொடுத்ததாக தகவல் வெளியானது.
சி.பி.ஐ. விசாரணை
அதைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் ரத்தானது.
இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அமலாக்கத்துறையும் விசாரிக்கிறது. இரு தரப்பினரும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த பேரத்தில் தரகராக செயல்பட்ட இடைத்தரகர் கிறிஸ்டியன் மிச்செல் கைது செய்யப்பட்டு, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
துணை குற்றப்பத்திரிகை
அமலாக்கத்துறை வழக்கில் 2016-ம் ஆண்டு, ஜூன் மாதம் குற்றப்பத்திரிகை, டெல்லி கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும், கடந்த 4-ந் தேதியன்று துணை குற்றப்பத்திரிகை ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் ‘ஏ.பி.’ என்ற எழுத்துகளால் சுட்டிக்காட்டப்படுபவர் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் அரசியல் செயலாளர் அகமது படேல் எம்.பி.தான் என இடைத்தரகர் கிறிஸ்டியன் மிச்செல் அடையாளம் காட்டி உள்ளார் என குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
இது ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், துணை குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளபடி, நான் அமலாக்கத்துறையினரிடம் ஒரு போதும் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை என கிறிஸ்டியன் மிச்செல் மறுத்தார்.
மனுதாக்கல்
இந்தநிலையில் டெல்லி கோர்ட்டில் கிறிஸ்டியன் மிச்செல் நேற்று ஒரு மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் அவர், “இந்த வழக்கின் துணை குற்றப்பத்திரிகை ஊடகங்களில் வெளியானது எப்படி என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும்” என்று வலியுறுத்தி உள்ளார்.
அமலாக்கத்துறையும் மனு
இதே போன்று, அமலாக்கத்துறையும் ஒரு மனு தாக்கல் செய்தது.
அதில், “குற்றம்சாட்டப்பட்டவருக்கு துணை குற்றப்பத்திரிகை நகல் இன்னும் தரவில்லை. ஆனால் அதில் நாங்கள் என்ன குறிப்பிட்டிருக்கிறோம் என்பது கிறிஸ்டியன் மிச்செல் வக்கீல்களுக்கு தெரிந்திருக்கிறது. இது மிக முக்கியமான பிரச்சினை. துணை குற்றப்பத்திரிகை எப்படி கசிந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்படவேண்டும்” என கூறப்பட்டுள்ளது.
நோட்டீஸ்
கிறிஸ்டியன் மிச்செல் மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி அரவிந்த் குமார், இது குறித்து பதில் மனுதாக்கல் செய்யுமாறு அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டார்.
அமலாக்கத்துறை மனு மீது 11-ந் தேதி விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுவரை குற்றப்பத்திரிகை நகல்களை மூடி முத்திரையிட்ட உறையில் பத்திரமாக வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.