தைவான், ஹாங்காங்கில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்தும் சீன கும்பல்

தைவான், ஹாங்காங்கில் இருந்து இந்தியாவுக்கு சீன கும்பல் தங்கம் கடத்துகிறது. 21 கிலோ தங்கத்துடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2019-11-07 23:10 GMT
புதுடெல்லி, 

தைவான், ஹாங்காங் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்தி வரும் சீன கும்பலை வருவாய் புலனாய்வு இயக்குனரகம் கண்டுபிடித்துள்ளது. கடந்த மாதம் 21-ந் தேதி, இந்த கும்பல் தைவானில் இருந்து குடிநீர் சுத்திகரிப்பு சாதனத்தை ‘கொரியர்’ மூலம் அனுப்பி வைத்தது. அதை டெல்லி விமான நிலையத்தில், அதே கும்பலைச் சேர்ந்த 2 பேர் பெற்றுக்கொண்டனர். பின்னர், அவர்கள் அந்த சாதனத்தை உருக்கி, அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கத்தை எடுத்து டெல்லி கரோக் பாக் நகை வியாபாரிகளிடம் விற்றுள்ளனர். இந்த அதிர்ச்சி தகவலை கண்டுபிடித்த வருவாய் புலனாய்வு இயக்குனரகம், டெல்லியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை நடத்தியது. அங்கு 21 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு ரூ.7 கோடியே 62 லட்சம் ஆகும்.

விமான நிலையத்தில் அந்த கடத்தல் தங்கத்தை பெற்ற தைவான் நாட்டு ஆசாமி ஒருவரும், இந்தியர் ஒருவரும் கைது செய்யப்பட்டனர். இதற்கு மூளையாக செயல்பட்ட சீன ஆசாமியும் பிடிபட்டான். அவன் தங்க கடத்தல் கும்பலில் முக்கியமானவன். ஆன்லைன் வணிக நிறுவனங்கள் மூலம் வீட்டு உபயோக பொருட்களை ‘ஆர்டர்’ செய்து, அதில் தங்கத்தை மறைத்து கொண்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளான். நகையை வாங்கிய நகை வியாபாரிகளிடமும் விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்