தேசிய செய்திகள்
ஆக்சிஜனை எடுத்துச்செல்வதில் உள்ள பிரச்சினை சரிசெய்யப்படும்: போதுமான ஆக்சிஜன் இருப்பில் உள்ளது; மத்திய அரசு உறுதி

நாட்டில் போதுமான ஆக்சிஜன் இருப்பில் உள்ளதால் அதுகுறித்து பீதியடையத் தேவையில்லை; ஆக்சிஜனை எடுத்துச் செல்வதில்தான் பிரச்சினை, அது சரிசெய்யப்பட்டு வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆக்சிஜன் பற்றாக்குறையைத் தீர்க்க
உயிர்களைக் காவு கொள்ளும் கொரோனாவின் கோரத்தாண்டவத்துக்கு எதிராக ஆக்சிஜன் சிலிண்டர்களுடன் நாடு போராடி வருகிறது.ஆங்காங்கே ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை பிரச்சினை எழுந்துள்ள நிலையில் அதைத் தீர்க்க மத்திய அரசு தீவிரம் காட்டுகிறது.கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களுக்கு நாட்டின் பிற பகுதிகளில் இருந்து ரெயில், விமானங்கள் மூலம் ஆக்சிஜனை கொண்டு வரும் நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளது. வெளிநாடுகளிலும் இருந்தும் ஆக்சிஜன், அதன் உற்பத்திக்கான சாதனங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.

‘பீதியடையத் தேவையில்லை’
இந்நிலையில், டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சக கூடுதல் செயலாளர் பியூஷ் கோயல் கூறியதாவது:-

‘நாட்டில் போதுமான அளவு ஆக்சிஜன் இருப்பில் உள்ளது. எனவே அதுகுறித்து பீதியடையத் தேவையில்லை. ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் மாநிலங்களில் இருந்து அதிக தேவையுள்ள பகுதிகளுக்கு அதை எடுத்துச்செல்வதில்தான் பிரச்சினை. சம்பந்தப்பட்ட அனைவரின் ஈடுபாடான பங்கேற்புடன் அது சரிசெய்யப்பட்டு வருகிறது.ஆக்சிஜனை டேங்கர்கள் மூலம் எடுத்துச் செல்லும் காலமும், விமானப் படை சரக்கு விமானங்களின் உதவியுடன் நான்கைந்து நாட்களில் இருந்து ஒன்றிரண்டு மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.

‘ஜி.பி.எஸ். மூலம் கண்காணிப்பு’
அதேபோல, ஆக்சிஜன் டேங்கர்கள் சென்றுகொண்டிருக்கும் இடமும் ஜி.பி.எஸ். மூலம் மத்திய அரசால் நேரடியாக கண்காணிக்கப்படுகிறது. முடிந்தவரை ஆஸ்பத்திரிகளுக்கு விரைவாக ஆக்சிஜன் கிடைக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆக்சிஜன் தடையில் விதிவிலக்கு
இதற்கிடையில், திரவ ஆக்சிஜனை மருத்துவம் அல்லாத பணிகளுக்கு பயன்படுத்த நேற்று முன்தினம் மத்திய அரசு தடை விதித்திருந்தது.அந்த தடையில் இருந்து, மருந்துத் துறை, மருந்துகளுக்கான கண்ணாடிக் குப்பிகள் மற்றும் சிறிய புட்டிகள் தயாரிப்பு மற்றும் பாதுகாப்புத் துறை ஆகியவற்றுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் அஜய் பல்லா நேற்று எழுதியுள்ள கடிதத்தில் இதைத் தெரிவித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்