கொரோனா அதிகரிக்கும் என்று விடுத்த எச்சரிக்கையை மத்திய அரசு புறக்கணித்துவிட்டது - விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

கொரோனா பரவல் அதிகரிக்கும் என்று நாங்கள் விடுத்த எச்சரிக்கையை மத்திய அரசு புறக்கணித்துவிட்டதாக மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும் விஞ்ஞானிகள் குழுவில் இடம்பெற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.

Update: 2021-05-03 16:34 GMT
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது. இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில் நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 68 ஆயிரத்து 147 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாடு முழுவதும் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியை நெருங்கியுள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 34 லட்சத்து 13 ஆயிரத்து 642 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து நாடு முழுவதும் இதுவரை 1 கோடியே 62 லட்சத்து 93 ஆயிரத்து 3 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனாவால் இதுவரை 2 லட்சத்து 18 ஆயிரத்து 959 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, நேற்று மட்டும் 3 ஆயிரத்து 417 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கும் என்று விடுத்த எச்சரிக்கையை மத்திய அரசு புறக்கணித்துவிட்டதாக கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்க அமைக்கப்பட்டுள்ள விஞ்ஞானிகள் குழுவில் இடம்பெற்றிருந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட பதிவில், கொரோனாவின் புதிய வகை தொற்று தொடர்பாக மார்ச் மாத தொடக்கத்திலேயே மத்திய அரசில் உள்ள மூத்த அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அந்த மூத்த அதிகாரிகள் பிரதமர் மோடியின் நேரடி கட்டுப்பாட்டில் இருப்பவர்கள். ஆனால், அந்த எச்சரிக்கையை மத்திய அரசு புறக்கணித்துவிட்டது என்று அந்த விஞ்ஞானிகள் குழுவில் இடம்பெற்றிருந்த பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு விஞ்ஞானி கூறியுள்ளார்.



கொரோனா வேகமாக பரவலாம் என்று எச்சரிக்கை விடுத்தபோதும் அந்த பரவலை தடுக்க மிகப்பெரிய அளவில் எந்தவித கட்டுப்பாடுகளையும் விதிக்க மத்திய அரசு முன்வரவில்லை. ஆயிரக்கணக்கான மக்கள் முகக்கவசம் அணியாமல் மத நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சிகளின் தேர்தல் பிரசார கூட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். விவசாய சட்டங்களை ரத்து செய்யக்கோரி ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்று மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும் குழுவில் இடம்பெற்றிருந்த விஞ்ஞானிகளில் 5 பேர் ராய்டர்ஸ் நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வேகமாக பரவலால் என்று மார்ச் மாதமே விஞ்ஞானிகள் குழு விடுத்த எச்சரிக்கையை மத்திய அரசு புறக்கணித்துவிட்டதாக வெளியாகியுள்ள தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்