மாவட்ட செய்திகள்
அமலாக்கத்துறையை கண்டு நான் பயப்படவில்லை : மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி

எல்லாவற்றையும் கடவுள் பார்த்துக் கொள்வார் என்றும், அமலாக்கத்துறையை கண்டு நான் பயப்பட வில்லை என்றும் மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.
பெங்களூரு,

மருத்துவ கல்வி மற்றும் நீரப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணி ஆட்சிக்கும் இது ஆபத்தை ஏற்படுத்தும் என்று கூறுகிறார்கள். இந்த நிலையில் இதுகுறித்து மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

அமலாக்கத்துறை எனக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தால் அதை கண்டு நான் பயப்பட மாட்டேன். சட்ட போராட்டம் நடத்துவேன். சட்டவிரோதமான முறையில் நான் சொத்துகளை குவிக்கவில்லை.

எனது சொத்துகள் குறித்து முழு விவரங்களை விசாரணை அமைப்புகளிடம் தாக்கல் செய்துள்ளேன். டெல்லியில் எனக்கு 2 வீடுகள் இருப்பது உண்மை. அதை நான் மூடி மறைக்கவில்லை. எந்த விசாரணைக்கும் நான் தயார்.

நான் ஒன்றும் கிரிமினல் இல்லை. அமலாக்கத்துறையை கண்டு நான் பயப்படவில்லை. எங்கெங்கு என்ன நடக்கிறது என்பது எனக்கு தெரியும். இப்போது அதுபற்றி நான் பேச விரும்பவில்லை. நேரம் வரும்போது இவை எல்லாவற்றையும் பற்றி சொல்கிறேன்.

அரசியல் என்பது கால்பந்து விளையாட்டு இல்லை. இது ஒரு சதுரங்க விளையாட்டு. சதுரங்க ஆட்டத்தை எப்படி விளையாடுவது என்பது எனக்கு தெரியும். யார் என்ன செய்தாலும் எனக்கு பயம் இல்லை.

எந்த தவறும் செய்யவில்லை

நான் எதற்காக பயப்பட வேண்டும்?. எல்லாவற்றுக்கும் மேலே கடவுள் இருக்கிறார். எல்லாவற்றையும் அவர் பார்த்துக் கொள்வார். நான் எந்த தவறும் செய்யவில்லை. விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக உள்ளேன்.

இதற்கு முன்பு வருமான வரித்துறையினர் என்னை அழைத்து விசாரித்தனர். அந்த விசாரணைக்கு நான் ஒத்துழைப்பு வழங்கினேன். கோர்ட்டு மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. நான் ஒன்றும் காதில் பூ வைத்துக்கொண்டு பெங்களூருவுக்கு வரவில்லை.

பழம் சிவப்பாக இருந்தால் அனைவரும் கல் எறிகிறார்கள். அதேபோல் நான் பலமாக இருப்பதால் தான் அனைவரும் என்னை இலக்காக கொண்டு செயல்படுகிறார்கள்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

இந்த பேட்டியை முடித்துக் கொண்டு அவர் தனியார் காரில் ஏறி சென்றார். அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை. டெல்லி சென்று மூத்த வக்கீல்களை சந்தி்த்து ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

1. மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்துக்கு தமிழகத்தின் ஒப்புதலை பெற தேவை இல்லை - கர்நாடக மந்திரி
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகத்துக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.
2. கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா முயற்சி செய்கிறது மந்திரி டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டு
கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா முயற்சி செய்வதாக மந்திரி டி.கே.சிவக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
3. தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க உத்தரவு: தேவேகவுடாவுடன் கலந்து ஆலோசித்து முடிவு டி.கே.சிவக்குமார் பேட்டி
தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கும்படி காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவு குறித்து தேவேகவுடாவுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று டி.கே.சிவக்குமார் கூறினார்.
4. நிரவ் மோடி இல்லத்தில் இருந்து ஆபரணங்கள், வாட்ச்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றியது அமலாக்கத்துறை
பி.என்.பி முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிரவ் மோடி இல்லத்தில் இருந்து ரூ.22 கோடி மதிப்பிலான பொருட்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். #NiravModi #PNBFraudCase