மாவட்ட செய்திகள்
விஜயாப்புரா அருகே சோகம்சுண்ணாம்பு ‘டப்பா’வைவிழுங்கிய 9 மாத குழந்தை சாவு

விஜயாப்புரா அருகே சுண்ணாம்பு ‘டப்பா’வை விழுங்கிய 9 மாத குழந்தை பரிதாபமாக இறந்தது.
பெங்களூரு, 

விஜயாப்புரா அருகே சுண்ணாம்பு ‘டப்பா’வை விழுங்கிய 9 மாத குழந்தை பரிதாபமாக இறந்தது.

குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களுக்கு அதிக விழிப்புணர்வு தேவை. வீடுகளில் உள்ள குழந்தைகளின் கைகளுக்கு கிடைக்கும் வகையில் மாத்திரை, மருந்துகள் மற்றும் சிறிய டப்பாக்கள் உள்பட உடலுக்கு ஆபத்தான பொருட்களை வைக்க கூடாது. மீறி வைத்தால் அந்த பொருட்கள் குழந்தைகளின் உயிரை காவு வாங்கி விடும். இதை எடுத்துக்காட்டும் விதமாக விஜயாப்புரா அருகே சோக சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

சுண்ணாம்பு டப்பாவை விழுங்கினான்

விஜயாப்புரா மாவட்டம் தி-கோட்டாவில் வசித்து வருபவர் விஸ்வநாத். இவருக்கு பிறந்து 9 மாதங்களே ஆன அழகிய ஆண் குழந்தை இருந்தது. இந்த குழந்தையின் பெயர் மல்லு.

சம்பவத்தன்று விஸ்வநாத் மற்றும் அவருடைய மனைவி வீட்டில் இருந்தனர். குழந்தை மல்லு வீட்டில் விளையாடி கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக திண்பண்டம் என்று நினைத்து சுண்ணாம்பு நிரம்பி வைத்திருந்த சிறிய ‘டப்பா’வை மல்லு எடுத்து விழுங்கினான். அந்த டப்பா குழந்தையின் தொண்டையில் சிக்கியது. இதனால் அவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

குழந்தை சாவு

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவனுடைய பெற்றோர் உடனடியாக அவனை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து சுண்ணாம்பு டப்பாவை வெளியே எடுத்தனர். இருப்பினும் அவனுடைய உடலில் சுண்ணாம்பு கலந்திருந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதனால் குழந்தைக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி குழந்தை மல்லு நேற்று முன்தினம் இறந்தான். இதுகுறித்து தி-கோட்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.