பள்ளி மாணவியை மானபங்கம் செய்த வாலிபருக்கு 1½ ஆண்டு ஜெயில்- கோர்ட்டு தீர்ப்பு
பள்ளி சென்று வீடு திரும்பிய மாணவியை மானபங்கம் செய்த வாலிபருக்கு 1½ ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி மும்பை கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.;
மும்பை,
பள்ளி சென்று வீடு திரும்பிய மாணவியை மானபங்கம் செய்த வாலிபருக்கு 1½ ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி மும்பை கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.
பள்ளி மாணவி மானபங்கம்
மும்பை அந்தேரி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் 14-ந் தேதி பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது பள்ளி மாணவியை, 25 வயது வாலிபர் ஒருவர் பின்தொடர்ந்து வந்தார். பின்னர் அவர் மாணவியை அவதூறாக பேசி அழைத்தார். எனவே மாணவி வாலிபரை கண்டித்தார்.
இதையடுத்து அந்த வாலிபர் மாணவியின் தலைமுடியை பிடித்து இழுத்தார். இந்த சம்பவம் குறித்து மாணவி அளித்த புகாரின் பேரில் போலீசார் வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
1½ ஆண்டு ஜெயில்
இந்த வழக்கு மீதான விசாரணை நீதிபதி ஏ.ஜே.அன்சாரி அடங்கிய அமர்வு முன் நடந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, ''குற்றம்சாட்டப்பட்ட நபர் வேண்டும் என்றே பாதிக்கப்பட்ட பெண்ணின் கையை பிடித்து இழுத்து, தலைமுடியை பிடித்து அவரை அவதூறாக பேசி உள்ளார். இதன்மூலம் அவர் பெண்ணை மானபங்கம் செய்தது உறுதியாகி உள்ளது.
குற்றம்சாட்டப்பட்ட நபர் மாணவியை அழைத்த வார்த்தை பொதுவாக ஆண்களால் பெண்களை இழிப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. பள்ளி சிறுமிகளுக்கு எதிரான இதுபோன்ற குற்றங்களை இரும்புகரம் கொண்டு ஒடுக்க வேண்டும். 'ரோடுசைடு ரோமியோக்களுக்கு' தகுந்த பாடம் புகட்ட வேண்டும்" என கூறி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட வாலிபருக்கு 1½ ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி தீர்ப்பு கூறினார்.