மும்பை,
மும்பை மாகிம் கடற்கரைக்கு நேற்று 12 வயதுடைய 3 சிறுவர்கள் குளிப்பதற்காக வந்தனர். அவர்கள் கடலில் இறங்கி ஆனந்த குளியல் போட்டுக்கொண்டு இருந்தனர். அப்போது திடீரென கடலில் எழுந்த ராட்சத அலை சிறுவர்கள் 3 பேரையும் வாரிசுருட்டி கடலுக்குள் இழுத்து சென்றது. அவர்கள் அபயகுரல் கேட்டு அங்கு வந்தவர்கள் 3 பேரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் ஒரு சிறுவனை மட்டுமே பத்திரமாக மீட்க முடிந்தது. மற்ற 2 பேரும் கடலில் மூழ்கி, அதிமான நீரை அருந்தியதால் மயங்கினர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் நடத்திய பரிசோதனையில் சிறுவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து போனது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தாராவி மற்றும் குர்லா பகுதியை சேர்ந்தவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாகிம் கடலில் சிறுவர்கள் 2 பேர் மூழ்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.