மும்பை,
நவிமும்பை கார்கர், நெரூல் மற்றும் வாஷி ஆகிய இடங்களில் நகைபறிப்பு சம்பவங்கள் அதிகளவில் நடந்து வருவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது. இந்த புகாரின் படி போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதில் 2 பேரின் அடையாளம் தெரியவந்தது. கல்யாண் அம்பிவிலியில் பதுங்கி இருந்த நகைப்பறிப்பு கொள்ளையன் ஒருவனையும், அவர் கொடுத்த தகவலின் படி மற்றொரு கொள்ளனையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ.6 லட்சம் மதிப்புள்ள நகைகள், ஒரு மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
நகைபறிப்பு சம்பவத்தில் தொடர்புடைய கொள்ளையர்கள் 2 பேரையும் கைது செய்ததை தொடர்ந்து நவிமும்பை போலீஸ் நிலையங்களில் பதிவாகி இருந்த 12 வழக்குகள் முடிவுக்கு வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.