மலாடில் மோட்டார் சைக்கில் விபத்தில் 2 வாலிபர்கள் பலி
மலாடில் மோட்டார் சைக்கிளில் தூக்கி வீசப்பட்டு தென்னை மரத்தில் மோதிய 2 வாலிபர்கள் பலியாகினர்.;
மும்பை,
மலாடில் மோட்டார் சைக்கிளில் தூக்கி வீசப்பட்டு தென்னை மரத்தில் மோதிய 2 வாலிபர்கள் பலியாகினர்.
தூக்கி வீசப்பட்டனர்
மும்பை மலாடு மால்வானி பகுதியை சேர்ந்தவர் அமீர் சேக் (வயது25). இவரது நண்பர் சலீம் சையத் (26). நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டு சென்றனர். 2 பேரும் ஹெல்மெட் அணியவில்லை. வணிக வளாகம் அருகே வந்த போது மோட்டார் சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.
இதனால் சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியது. அப்போது அதிக வேகம் காரணமாக மோதியதால் மோட்டார் சைக்கிளில் இருந்த 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
2 வாலிபர்கள் பலி
இதில் சாலையோரம் நின்ற தென்னை மரத்தில் 2 பேரும் மோதி கீழே விழுந்தனர். சினிமா காட்சியை மிஞ்சும் வகையில் நடந்த விபத்தை நேரில் கண்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பலத்த காயமடைந்த 2 பேரும் உயிருக்கு போராடினர். இது பற்றி தகவலின் பேரில் பங்கூர்நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் 2 பேரையும் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் நடத்திய பரிசோதனையில் வரும் வழியிலேயே 2 பேரும் உயிரிழந்ததாக தெரியவந்தது.
இதையடுத்து உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில், சலீம் சையத் மோட்டார் சைக்கிளை அலட்சியமாக அதிவேகமாக ஓட்டியதால் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.