நாடு முழுவதும் 2½ லட்சம் வாக்காளர்கள் 100 வயதை கடந்தவர்கள்- தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தகவல்
நாடு முழுவதும் 100 வயதை கடந்த வாக்காளர்கள் 2 லட்சத்து 49 ஆயிரம் பேர் இருப்பதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறினார்.;
மும்பை,
நாடு முழுவதும் 100 வயதை கடந்த வாக்காளர்கள் 2 லட்சத்து 49 ஆயிரம் பேர் இருப்பதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறினார்.
விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
நாடு முழுவதும் துணை மற்றும் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி கடந்த மாதம் 25-ந்தேதி தொடங்கி கடந்த 7-ந் தேதி வரை நடந்தது. இதையடுத்து ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
இந்த நாட்களின் முக்கியத்துவத்தை குறிக்கும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம் முறையான வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் தேர்தல் பங்கேற்பு என்ற விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை மராட்டிய மாநிலம் புனேயில் தொடங்கியது. இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இந்த பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நகர்புற வாக்காளர்கள்
ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணி நடைபெறுகிறது. நகர்புறங்களில் வாக்காளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதே தேர்தல் ஆணையத்தின் முக்கிய நோக்கமாகும். வாக்களிப்பதன் மூலம் மட்டுமே வலுவான ஜனநாயகத்தை மலர செய்ய முடியும். எனவே நகர்புற வாக்காளர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதோடு, தவறாமல் ஓட்டுப்போட முன்வர வேண்டும்.
சில நகரங்களின் பெயரை குறிப்பிட விரும்பவில்லை. அந்த நகரங்களை போல மோசமான வாக்குப்பதிவு இருக்கக்கூடாது. எனவே தான் நகர்புறங்களில் இதுபோன்ற விழிப்புணர்வு பேரணியை நடத்தி வருகிறோம்.
இளைஞர்கள் வாட்ஸ்அப்பில் தங்கள் கருத்துக்களை பதிவிடுகிறார்கள். அவர்கள் ஓட்டு போடுவதன் மூலம் தங்களது எண்ணத்தை ஏன் வெளிப்படுத்தக்கூடாது?.
100 வயதை கடந்தவர்கள்
நாடு முழுவதும் 100 வயதை கடந்த வாக்காளர்கள் 2 லட்சத்து 49 ஆயிரம் பேர் இருப்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். நீங்கள் அவர்களுடன் பழகும்போது, வாக்களிப்பதன் கடமை பற்றிய பரவசம் ஏற்படும்.
இதேபோல நாடு முழுவதும் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 1 கோடியே 89 லட்சம் பேர் உள்ளனர்.
சமீபத்தில் இறந்த இந்தியாவின் முதல் வாக்காளர் ஷியாம் சரண் நேகிக்கு 106 வயதாகும். அவர் இறப்பதற்கு 3 தினங்களுக்கு முன்பு தபால் மூலம் வாக்கு அளித்தார். இது தான் கடமை உணர்வு.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் புனே நகரிலும் குறைவான வாக்குகளே பதிவானது. இது புனே நகர வாக்காளர்களின் அக்கறையின்மையை காட்டுகிறது. நகர்ப்புற மக்கள் அனைவரும் ஓட்டுப்போடுவதில் அதிக அக்கறை காட்ட முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.