வெளிமாநிலத்தில் இருந்து துப்பாக்கிகள் கடத்தி வந்த 2 பேர் கைது
வெளிமாநிலத்தில் இருந்து துப்பாக்கிகளை கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;
மும்பை,
மும்பை மான்கூர்டு சிவாஜி நகர் பகுதியில் துப்பாக்கி விற்க ஆசாமி வரவுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அப்பகுதியில் கண்காணித்து வந்தனர்.
அப்போது ஆட்டோ ஒன்றில் டிரைவர் உள்பட 2 பேர் ஆயத்த ஆடைகளுடன் வந்தனர். இதனை கண்ட போலீசார் சந்தேகத்தில் பேரில் அவர்களை வழிமறித்து விசாரித்தனர். இதில் தாராவியை சேர்ந்த ஆரிப் சையத் (34), ஆட்டோ டிரைவர் ஹக்கியுல்லா கான் (33) என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரிடம் சோதனை போட்டதில் 3 துப்பாக்கிகள், 14 தோட்டாக்கள் இருந்ததை பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்.
இவர்கள் உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூரில் இருந்து ஆசாம்காட் வழியாக மும்பைக்கு துப்பாக்கிகளை கடத்தி வந்தது தெரியவந்தது. இதே போன்று பலமுறை ஆயுதங்கள் கடத்தி வந்தனரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.