புனேயில் தறி கெட்டு ஓடிய லாரி மோதி 2 பேர் பலி
பிரேக் பழுதானதால் தறிகெட்டு ஓடிய லாரி மோதி 2 பேர் பலியாகினர்.;
புனே,
பிரேக் பழுதானதால் தறிகெட்டு ஓடிய லாரி மோதி 2 பேர் பலியாகினர்.
2 பேர் பலி
புனேயில் இருந்து மதுபான மூலப்பொருட்கள் டேங்கர் லாரி மூலம் ஹடப்சரில் உள்ள தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த டேங்கர் லாரி புனே-சாஸ்வாட் ரோடு திவே காட் வனப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு 8.30 மணி அளவில் வந்த போது திடீரென பிரேக் பழுதானது. இதனால் லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. அப்போது எதிரே வந்த 2 மோட்டார் சைக்கிளின் மீது லாரி மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள்களில் இருந்த 2 பேரும் தூக்கி வீசப்பட்டு சாலையோரம் இருந்த 60 அடி பள்ளத்தில் விழுந்தனர். இதில் சம்பவ இடத்திலேயே 2 பேரும் பலியாகினர்.
மற்றொருவர் படுகாயம்
மேலும் லாரி மற்றொரு நபர் மீது மோதியதில் அவர் விபத்தில் படுகாயமடைந்தார். விபத்து பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். காயமடைந்த நபரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியான 2 பேரின் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். லாரி மோதிய விபத்தில் தீ விபத்து ஏற்படாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.