வாலிபரை கொலை செய்த 2 பேருக்கு ஆயுள் தண்டனை
முன்விரோதம் காரணமாக வாலிபரை கொலை செய்த 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.;
மும்பை,
முன்விரோதம் காரணமாக வாலிபரை கொலை செய்த 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
முன்விரோதம்
மும்பை கோவண்டி பகுதியை சேர்ந்தவர் ராகேஷ் சவுத்ரி(வயது27). அதே பகுதியை சேர்ந்த அபுபக்கர் என்பவர் தனது கூட்டாளிகளான சபீர் சையத் (27), முகமது சேக் (29) ஆகியோருடன் சேர்ந்து கேபிள் வயர் இணைப்பு, சட்டவிரோதமாக மின்திருட்டு போன்ற தொழில்களில் ஈடுபட்டு வந்தார். இதற்கு ராகேஷ் சவுத்ரி கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். மேலும் இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து மின்திருட்டில் ஈடுபட்டு வந்த அபுபக்கர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். தன் மீது புகார் கொடுத்த ராகேஷ் சவுத்ரி மீது அவர் முன்விரோதம் கொண்டார். இதனால் அவ்வப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
ஆயுள் தண்டனை
கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந்தேதி அபுபக்கரின் கூட்டாளிகளான சபீர் சையத், முகமது சேக் ஆகிய 2 பேர் சேர்ந்து ராகேஷ் சவுத்ரியை வாளால் தாக்கி கொலை செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் பிடித்து கைது செய்தனர். இது குறித்து போலீசார் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். கோர்ட்டில் இறுதி கட்ட விசாரணை நிறைவடைந்த நிலையில் கொலை செய்த சபீர் சையத் மற்றும் முகமது சேக் மீதான ஆதாரங்கள் நிரூபணமானது.
இதனால் அவர்களுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.11 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.