ரூ.24 கோடி வெளிநாட்டு சிகரெட் பறிமுதல்
நவிமும்பை துறைமுகத்தில் ரூ.24 கோடி வெளிநாட்டு சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.;
மும்பை,
நவிமும்பை துறைமுகத்தில் ரூ.24 கோடி வெளிநாட்டு சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
வெளிநாட்டு சிகரெட் கடத்தல்
நவிமும்பை நவசேவா துறைமுகம் வழியாக அதிகளவில் வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு இயக்குனரக பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் சம்பவத்தன்று துறைமுகத்தில் கன்டெய்னர்கள் நடமாட்டத்தை ரகசியமாக கண்காணித்தனர்.
அப்போது குறிப்பிட்ட ஒரு கன்டெய்னர் சோதனைக்கு எடுத்து செல்லப்படும் வழியில், தனியார் குடோனுக்கு எடுத்து செல்லப்படுவதை அதிகாரிகள் கவனித்தனர்.
ரூ.24 கோடி சிகரெட் பறிமுதல்
உடனடியாக அவர்கள் தனியார் குடோனுக்குள் புகுந்து அந்த கன்டெய்னரை திறந்து சோதனை நடத்தினர். இந்த சோதனையில் இந்தியாவில் தடை செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள் கன்டெய்னரில் கட்டு, கட்டாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அதிகாரிகள் 1.2 கோடி எண்ணிக்கையிலான சிகரெட்டுகளை பறிமுதல் செய்தனர். இவற்றின் சந்தை மதிப்பு ரூ.24 கோடி ஆகும். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தடைசெய்யப்பட்ட சிகரெட்டை கடத்திய இறக்குமதியாளர் உள்பட 5 பேரை கைது செய்தனர்.