மூத்த குடிமக்கள், மாற்று திறனாளிகளுக்கு 25 சதவீதம் கட்டண சலுகை

மும்பையில் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாணவர்களுக்கு 25 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்பட்டுள்ளது.;

Update:2023-04-30 00:15 IST

மும்பை, 

மும்பையில் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாணவர்களுக்கு 25 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்பட்டுள்ளது.

கட்டண சலுகை

மும்பையில் தகிசர் கிழக்கு - டி.என். நகர் (அந்தேரி மேற்கு) மற்றும் அந்தேரி கிழக்கு - தகிசர் கிழக்கு இடையே (வழித்தடம் 2ஏ, 7) மாநில மெட்ரோ ரெயில் கழகம் சார்பில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தில் மாணவர்கள், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டண சலுகை வழங்கி முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அறிவித்து உள்ளார். மராட்டிய தின கொண்டாட்டத்தையொட்டி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நாளை முதல் அமல்

இதுதொடர்பாக முதல்-மந்திரி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அந்தேரி - தகிசர் இடையே வழித்தடம் 7, 2ஏ-யில் பயணம் செய்யும் 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், 12-ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு வருகிற 1-ந் தேதி (நாளை) முதல் 25 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்பட உள்ளது. மாற்றுத்திறனாளிகள் மருத்துவ சான்றிதழையும், மூத்த குடிமக்கள் வயது சான்றிதழையும், மாணவர்கள் பள்ளி அடையாள அட்டை மற்றும் பெற்றோர் அல்லது தங்களின் பான் கார்டை காட்டி கட்டண சலுகையை பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்