வந்தே பாரத் ரெயிலுக்காக 25 ரெயில்கள் நேரம் மாற்றியமைப்பு
வந்தே பாரத் ரெயில் இயக்கம் காரணமாக மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் 25 ரெயில்கள் நேரம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.;
மும்பை,
வந்தே பாரத் ரெயில் இயக்கம் காரணமாக மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் 25 ரெயில்கள் நேரம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.
ரெயில் நேரம் மாற்றம்
குஜராத் மாநிலம் காந்திநகரில் இருந்து மும்பைக்கு 7 மணி நேரத்தில் பயணிக்கக்கூடிய வகையில் வந்தே பாரத் என்ற அதிவேக விரைவு ரெயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த வந்தே பாரத் ரெயில் சேவையை கடந்த செப்டம்பர் மாதம் 30-ந் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த ரெயில் மணிக்கு 180 கி.மீ வேகத்தில் செல்லக்கூடியது.
இந்த ரெயிலின் இயக்கம் காரணமாக மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் செல்லும் 25 ரெயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
எந்தெந்த ரெயில்கள்
இதன்படி சதாப்தி எக்ஸ்பிரஸ், மும்பை சென்டரல்-ஆமதாபாத் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஹவுரா-ஆமதாபாத், பாந்திரா டெர்மினல்-கோரக்பூர் ஹம்சபர் எக்ஸ்பிரஸ், ராம்நகர் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 25 ரெயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி மேற்கு ரெயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி சுமித் தாக்குர் கூறுகையில், மாற்றி அமைக்கப்பட்ட ரெயில் நேரங்கள் சில நிமிடங்கள் மட்டும் திருத்தப்பட்டுள்ளது. ரெயில் வசதியை மேம்படுத்தவே காலநேரம் மாற்றப்பட்டுள்ளது. புதிய அட்டவணையை அடுத்த சில நாட்களில் நடைமுறைக்கு வரும், என்றார்.