உலக கோப்பை கால்பந்து போட்டி திரையிடப்பட்ட மும்பை விடுதியில் 3 வயது சிறுவன் பலி- 5-வது மாடியில் இருந்து தவறி விழுந்த சோகம்
உலக கோப்பை கால்பந்து போட்டி திரையிடப்பட்ட மும்பை விடுதியில் 5-வது மாடியில் இருந்து 3 வயது சிறுவன் தவறி விழுந்து பலியானான்.;
மும்பை,
உலக கோப்பை கால்பந்து போட்டி திரையிடப்பட்ட மும்பை விடுதியில் 5-வது மாடியில் இருந்து 3 வயது சிறுவன் தவறி விழுந்து பலியானான்.
தவறி விழுந்த சிறுவன்
ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய உலக கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதை காண்பதற்காக ஆங்காங்கே அகன்ற திரை அமைக்கப்பட்டு இருந்தன.
அந்த வகையில் மும்பை சர்ச்கேட் பகுதியில் வான்கடே மைதானம் அருகில் கர்வாரே கிளப் ஹவுசில் உலக கோப்பை கால்பந்து போட்டி பெரிய திரையில் திரையிடப்பட்டது. போட்டியை காண மும்பை பரேல் பகுதியை சேர்ந்த அவ்னிஷ் ரதோட் தனது 3 வயது மகன் ஹிரித்யான்ஷ் மற்றும் குடும்பத்துடன் சென்று இருந்தார். கால்பந்து போட்டி 6-வது தளத்தில் உள்ள மொட்டை மாடியில் திரையிடப்பட்டது.
5-வது மாடியில் இருந்து...
போட்டியின் இடையே சிறுவன் ஹிரித்யான்ஷ், மற்றொரு 10 வயது சிறுவனுடன் 5-வது மாடியில் உள்ள கழிவறைக்கு சென்று திரும்பினான்.
அப்போது எதிர்பாராதவிதமாக சிறுவன் ஹிரித்யான்ஷ் படிக்கட்டில் இருந்து தவறி தரை தளத்தில் விழுந்தான். மாடிப்படியில் உள்ள தடுப்பு ஒரு இடத்தில் உடைந்து இருந்துள்ளது. அந்த இடைவெளி வழியாக சிறுவன் தவறி தரை தளத்தில் விழுந்து விட்டான்.
பரிதாப சாவு
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த 10 வயது சிறுவன் ஓடிச்சென்று கால்பந்து போட்டி பார்த்து கொண்டு இருந்த பெற்றோரிடம் கூறினான். உடனடியாக அவர்கள் ஹிரித்யான்சை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். தலை மற்றும் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டு சிறுவன் உயிரிழந்தது தெரியவந்தது.
மாடிப்படி இடைவெளி வழியாக 5-வது மாடியில் இருந்து விழுந்து சிறுவன் பலியான சம்பவம் மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஒட்டுமொத்த கால்பந்து ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விபத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதே நேரத்தில் படிக்கட்டில் தடுப்பு அமைக்க தவறிய கிளப் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறுவனின் குடும்பத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.